CM இருக்கையில் தேஜஸ்வி? பாஜக கூட்டணிக்கு சிக்கல்.. பீகார் வரலாறு சுவாரஸ்யம் | Bihar Election 2025
பீகார் சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக சுமார் 5 சதவிகித வாக்குகள் பதிவான 3 முறையும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சி ஆட்சியை இழப்பது வாடிக்கையாக உள்ளது. நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா? தேஜஸ்வி யாதவ் முதல்முறையாக ஆட்சியை பிடிப்பாரா? என்பதை ஒட்டுமொத்த நாடுமே உற்று கவனித்து கொண்டுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. முதற்கட்டத்தில் பதிவான 65.08 சதவிகித வாக்குகளே சாதனையாக கருதப்பட்ட நேரத்தில், இரண்டவது கட்டத்தில் 68.76 சதவிகித வாக்குகள் பதிவாகின. 2020ம் ஆண்டு தேர்தலில் பதிவான 57.29 சதவிகிதத்தை காட்டிலும், 9.62 சதவிகித கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், நிதிஷ்குமார் - பாஜக கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. அதேநேரம், கடந்த கால வரலாறு கருத்து கணிப்புகளுக்கு நேர் எதிராக உள்ளன.
கடந்த கால தரவுகளை ஆராய்ந்தால், மாநில தேர்தலில் கூடுதலாக 5 சதவிகிதத்திற்கும் அதிகப்படியாக வாக்குப்பதிவு உயர்ந்த 3 முறையும் ஆளுங்கட்சி தோல்வி கண்டுள்ளது.
1962ம் ஆண்டு பதிவான 44.5 சதவிகித வாக்குகளானது 1967ம் ஆண்டு 51.5 சதவிகிதமாக உயர்ந்தது. அதாவது 7 சதவிகித கூடுதல் வாக்குகள் பதிவாகின. இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ, காங்கிரஸ் இல்லாத கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைத்தது. 1977ம் ஆண்டு பதிவான 50.5 சதவிகிதத்தை காட்டிலும் சுமார் 6.8 சதவிகிதம் அதிகரித்து 1980ம் ஆண்டு தேர்தலில் 57.3 சதவிகித வாக்குகள் பதிவாகின. இதனால் அப்போதும் பீகார் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து 1985ம் ஆண்டு பதிவான 56.3 சதவிகித வாக்குகளானது 1990ம் ஆண்டு 5.7 சதவிகிதம் அதிகரித்து 62 சதவிகிதம் ஆக பதிவானது. காங்கிரஸை அரியணையில் இருந்து இறக்கி ஜனதா தளம் கட்சி ஆட்சிக்கு வந்தது
இந்நிலையில் தான் கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை 9.62 சதவிகித வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன. இதனால் பீகாரில் ஆட்சி மாற்றம் நடைபெறுமா? கடந்த கால வரலாறு மீண்டும் பலிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகளவில் தங்களது ஜனநாயக கடமையை செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியின் வெளிப்பாடா? அல்லது கடைசி கட்டத்தில் நிதிஷ்குமார் அறிவித்த பகளிர் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களின் பிரதிபலிப்பா? என்பது நாளை தெரிய வரும். நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சர் ஆவாரா? தேஜஸ்வி யாதவ் முதல்முறையாக ஆட்சியை பிடிப்பாரா? என்பதை ஒட்டுமொத்த நாடுமே உற்று கவனித்து கொண்டுள்ளது.





















