ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஆதார் கட்டாயம், டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!
ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறையை இன்று முதல் அமல்படுத்துகிறது இந்திய ரயில்வே அமைப்பு. இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம்.
இந்தியாவில் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் போக்குவரத்தை தான் பொதுமக்கள் அதிகம் நம்பியுள்ளனர். குறிப்பாக குறைந்த செலவில் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவில் செல்ல முடியும் என்பதால் அதிக மக்கள் ரயில் பயணத்தைத் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக விரைவு ரயில்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கும்.
இந்த நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய விதிமுறையை இன்று முதல் அமல்படுத்துகிறது இந்திய ரயில்வே அமைப்பு. அதாவது இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியான நிலையில், இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. குறிப்பாக ரயில் டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்களைக் குறைக்கவும், உண்மையான பயணிகளுக்கு ரயில் டிக்கெட் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் தான் இந்த புதிய விதிமுறை கொண்டுவந்துள்ளது IRCTC.
ஆகவே இனி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு முன்பு IRCTC செயலி அல்லது இணையதளம் வாயிலாக ஆதார் இணைப்பை மேற்கொள்ள வேண்டும். ஆதார் இணைப்பு சரிபார்க்கப்பட்ட பிறகு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய விதிமுறை மூலம் சரியான பயணிகளுக்கு ரயில் டிக்கெட் சென்றடைவது உறுதி செய்யப்படும் என்று இந்திய ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ரயில் நிலைய வளாகத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு செய்ய பயணிகளுக்கான விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே இவர்கள் எப்போதும் போல ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்திய ரயில்வே அமைப்பு கடந்த ஆண்டு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் இணைப்பைக் கட்டாயம் ஆக்கியது. குறிப்பாக இதன் மூலம் இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்தியது ரயில்வே அமைப்பு. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கும் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கி உள்ளது இந்திய ரயில்வே அமைப்பு.
ஐஆர்சிடிசி உடன் ஆதாரை இணைக்கும் வழிமுறைகள்:
உங்களது ஐஆர்சிடிசி செயலி அல்லது இணையதளத்தில் உள்நுழைந்து Check Aadhar அல்லது Link Aadhar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். அதன்பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
அந்த ஓடிபி எண்ணை உள்ளிட்டதும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் உங்கள் ஆதார் சரிபார்ப்பு பூர்த்தி அடையும்.
தற்போது ரயில்ஓன் செயலியில் உள்ள R-wallet மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்யப்படாத (Unreserved) டிக்கெட்டுகளை வாங்கினால் 3 சதவீதம் கேஷ்பேக் (Cashback) வழங்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் இந்திய ரயில்வே அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 14 முதல் யுபிஐ (UPI), டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் என எந்தவொரு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி பணம் செலுத்தினாலும், டிக்கெட் விலையில் நேரடியாக 3 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ரயில்ஒன் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை எடுப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இணையதளங்கள், கவுண்டர்களில் இந்த தள்ளுபடி சலுகை கிடைக்காது.





















