பணக்கார டாப் 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?
2021 ஆம் ஆண்டு தற்போது அதிக பணக்காரர்களாக உள்ள டாப் -5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?
இந்தியாவில் விளம்பரங்களில் நடிக்க நீங்கள் பெரிய நட்சத்திரமாக இருக்க வேண்டும் அல்லது ஒரு பெரிய விளையாட்டு வீரராக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கிரிக்கெட் வீரர் என்றால் உங்களுக்கு விளம்பரங்கள் தேடி வரும். கிரிக்கெட் வீரர்களுக்கு விளம்பரத்தில் வரும் ஊதியம் அவர்களை பணக்காரர்களாக மாற்றும் விதமாக அமைந்துள்ளது.
அத்துடன் பலருக்கு ஸ்பான்சர்ஷிப் மூலம் வரும் தொகையும் கூடுதல் லாபமாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் 2021 ஆம் ஆண்டு தற்போது அதிக பணக்காரர்களாக உள்ள டாப் -5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?
5. விரேந்திர சேவாக்-(351 கோடி ரூபாய்):
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் விரேந்திர சேவாக். இவரது அதிரடி ஆட்டம் பல பந்துவீச்சாளர்களை திணறடித்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 300 ரன்கள் கடந்து அசத்தினார். அதன்பின்னர் பல முறை சச்சின் மற்றும் காம்பீர் ஆகியோருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அசத்தி வந்தார். இவர் கிரிக்கெட் ஓய்விற்கு பிறகு பல விளம்பரங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் இந்தி வர்ணனையாளராக இருந்து வந்தார். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 351 கோடி ரூபாய் ஆக உள்ளது.
4. சவுரவ் கங்குலி- (619 கோடி ரூபாய்):
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் இந்திய அணியை பல வரலாற்று வெற்றிகளை பெற செய்துள்ளார். தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து அசத்தினார். 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார். இந்திய கிரிக்கெட் அணி சூதாட்ட புகாரில் சிக்கி தவித்த போது அணியை சிறப்பாக வழிநடத்தினார். தனது ஓய்விற்கு பிறகு வர்ணனையில் ஈடுபட்டு வந்தார். அத்துடன் ஐஎஸ்.எல் கால்பந்து தொடரில் கொல்கத்தா அணியின் உரிமையாளராக கங்குலி இருந்து வருகிறார்.தற்போது இவர் பிசிசிஐயின் தலைவர் பதவியில் இருந்தது வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு 619 கோடி ரூபாய் ஆக உள்ளது.
3. விராட் கோலி- (696 கோடி ரூபாய்):
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தற்போதைய வீரர் கோலி மட்டும் தான். மற்றவர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட் காலத்திலேயே அதிகம் சம்பாதிக்கும் வீரராக வலம் வருகிறார். இவர் ஆடி, எம்.ஆர்.எஃப், புமா உள்ளிட்ட பிராண்டுகளுக்கு விளம்பரங்களில் நடித்து வருகிறார். அத்துடன் ஐஎஸ்.எல் தொடரில் கோவா எஃப்சி அணியின் உரிமையாளராகவும் இருந்து வருகிறார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 696 கோடி ரூபாய் ஆக இருந்து வருகிறது.
2. மகேந்திர சிங் தோனி-(840 கோடி ரூபாய்):
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் இந்தியாவில் மிகவும் அதிக ரசிகர்களை கொண்ட வீரர்களில் ஒருவர். இந்திய அணியை இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வெல்ல வைத்த கேப்டன். அத்துடன் முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன், சாம்பியன்ஸ் டிராபி வென்ற கேப்டன் என்று பல சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம். ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களுக்கு மேல் கடந்து அசத்தியுள்ளார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக இருந்து 829 விக்கெட் வீழ்த்த காரணமாக இருந்துள்ளார். இவர் டிவிஎஸ் மோட்டார்ஸ், ரீபோக்,ரெட் பஸ், கோ டெடி, லேஸ், கல்ஃப் ஆயில் உள்ளிட்டவற்றின் விளம்பரங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். அத்துடன் ஐஎஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணியின் உரிமையாளராகவும் உள்ளார். இவருடைய தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 840 கோடி ரூபாய் ஆக உள்ளது.
1.சச்சின் டெண்டுல்கர்-890 கோடி ரூபாய்:
கிரிக்கெட் உலகில் டான் பிராட்மென் பிறகு உலக நாடுகள் அனைத்தும் போற்றிய வீரர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் அடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். அத்துடன் 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் தான். இப்படி பல சாதனைகளை அடிக்கி கொண்டே போகலாம். 1990களில் 100 கோடி ரூபாய் வரை பல நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். எம்.ஆர்.எஃப், பிரிட்டானியா, பிலிப்ஸ்,பிஎம்டபிள்யூ, பெப்சி, லுமினஸ் உள்ளிட்ட பல விளம்பரங்களி நடித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு தற்போது 890 கோடி ரூபாய் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.