ஒலிம்பிக் துவங்குவற்கு முன்பே ஊக்க மருந்து சர்சையில் இந்திய வீரர்!
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மல்யுத்த வீரரின் இரத்த மாதிரியில் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் 23ஆம் தொடங்க உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளின் வீரர் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய வீரர் வீராங்கனைகளும் பதக்கம் வெல்லும் முனைப்புடன் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். நேற்று இந்தியா வீரர்களின் ஒலிம்பிக் தயாரிப்பு குறித்து பிரதமர் மோடியும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில் இந்தியாவிற்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக மீண்டும் ஒரு பெரிய சர்ச்சை வரும் சூழல் உருவாகியுள்ளது. அதாவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மல்யுத்த வீரர் ஒருவரின் இரத்த மாதிரியில் ஊக்க மருந்து பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அவருடைய ஏ இரத்த மாதிரியில் இந்த ஊக்க மருத்து பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவருடைய பி இரத்த மாதிரியின் பரிசோதனை முடிவு இன்னும் வெளி வரவில்லை. அதனால் அந்த வீரர் யார் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. ஒரு வேளை பி இரத்த மாதிரியிலும் ஊக்க மருந்து பயன்படுத்தப்பட்டது உறுதியானால் அவருக்கு தடை கிடைப்பது உடன் இந்தியாவிற்கு அந்தப் பிரிவில் கிடைத்த ஒலிம்பிக் வாய்ப்பும் பறிபோகும்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக மல்யுத்த வீரர் ஒருவர் சிக்குவது இதுவே முதல் முறை அல்ல. ஏனென்றால் ஏற்கெனவே கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக இந்தியாவின் மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் போதை பொருள் பயன்படுத்தியதாக இரத்த மாதிரியில் தெரியவந்தது. இதனால் அவருக்கு 4 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் 2016ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வென்றிருந்த இடமும் பறிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தியாவிற்கு ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. தற்போது மீண்டும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக மல்யுத்ததில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா சார்பில் 8 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆடவர் பிரிவில் ரவி தஹியா(57 கிலோ), பஜ்ரங் புனியா(65 கிலோ), தீபக் புனியா(86 கிலோ), சுமித் மாலிக்(125 கிலோ)ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மகளிர் பிரிவில் வினேஷ் போகாட்(53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), சீமா பிஸ்லா(50 கிலோ) ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் முதல் இந்தியா மல்யுத்த பிரிவில் தொடர்ந்து பத்தக்கங்களை வென்று வருகிறது. 2008,2012,2016 என் அனைத்து ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா மல்யுத்தத்தில் பதக்கம் பெற்று வருகிறது. இதனால் இந்தியா அதிகம் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் விளையாட்டுகளில் மல்யுத்தமும் ஒன்று.
மேலும் படிக்க: ஆசிய சாம்பியன்ஷிப் தங்க மங்கை பூஜா ராணி! காயங்களை கடந்து மகுடம் சூட்டிய மகாராணி!