Womens Hockey Olympics | தள்ளுவண்டி, வறுமை, ஒடுக்குமுறை.. ஒலிம்பிக்ஸ் ஹாக்கியில் சாதித்த 8 இந்திய பெண்களின் கதைகள்..!
கனவை நனவாக்க, சாதனை சிகரங்களைத் தொட எதுவுமே தடையில்லை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நம் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர்.
கனவை நனவாக்க, சாதனை சிகரங்களைத் தொட எதுவுமே தடையில்லை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நம் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி 3-4 என்ற கணக்கில் பிரிட்டன் அணியிடம் போராடி, தோல்வியைத் தழுவியது.
இதுகுறித்து பிரிட்டன் ஹாக்கி அணி தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னே ஓர் அற்புதமான ஆட்டம்; அற்புதமான எதிரணி. நீங்கள் சிறப்பாக விளையாடினீர்கள். அடுத்த சில வருடங்கள் உங்களுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தது.
இந்தப் பாராட்டு ஒன்றே போதும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பெருமையையும் கடுமையான உழைப்பையும் பறைசாற்ற. அந்த அணியில் இடம்பெற்ற சில வீராங்கனைகளின் உத்வேகம் தரும் வாழ்க்கைக் கதையை அறிவோம்..
1.ராணி ராம்பால்:
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவர் ராணி ராம்பால். ஒரு காலத்தில் உடைந்த ஹாக்கி ஸ்டிக் கொண்டு பயிற்சி செய்தவர் தான் இன்று நம்பிக்கை அணியின் தலைவியாக இருக்கிறார். ராணியின் குடும்பம் ஏழ்மையால் சூழப்பட்டது. அவரது தாய் வீட்டு வேலை செய்துவந்தார். தந்தை தள்ளு வண்டி இழுத்துவந்தார். அவருக்கு அன்றாட வருமானம் ரூ.100 ஐ தாண்டியதில்லை. மைதானங்களில் நடைபெறும் ஹாக்கி விளையாட்டை தூரத்திலிருந்தே பார்த்து ஏங்கி நின்ற காலங்களும் ராணி வாழ்க்கையில் இருந்துள்ளது. ஆரம்பத்தில் உடைந்த ஹாக்கு ஸ்டிக்கில் தான் அவர் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அது அவரது வெற்றிப் பயணத்துக்கு எந்தவித தடையும் செய்யவில்லை. மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதை நிரூபித்திருக்கிறார் ராணி ராம்பால்.
2.லால்ரெம்சியாமி..
பதின்ம வயது முடிந்தவுடனேயே கையில் ஹாக்கி ஸ்டிக்கை எடுத்த மிசோரம் வீராங்கனை லால்ரெம்சியாமி. இப்போது வயது 21. இரண்டு ஆண்டுகளில் அபார பயிற்சி, அசாத்திய திறனால் ஒலிம்பிக் களம் கண்டிருக்கிறார். தான் ஒலிம்பிக் அணியில் இடம்பெற வேண்டும் என்பது தனது மறைந்த தந்தையின் கனவு எனக் கூறுகிறார். ஃபெடரேஷன் ஆஃப் இண்டர்நேஷனல் ( FIH) வழங்கிய ரைசிங் ஸ்டார் விருதைப் பெற்ற ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர். ஆங்கிலம், இந்தி இரண்டுமே அவருக்கு ஆரம்பத்தில் கடினமான பாஷையாகவே இருந்துள்ளது. அதனால், அவர் சைகையில் தான் பெரும்பாலும் அணியினருடன் பேசியிருக்கிறார். மொழி அவரது டீம் ஸ்பிரிட்டுக்கோ, பயிற்சிக்கோ தடையாக இருக்கவில்லை.
3.தீப் கிரேஸ் எக்கா
ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் லுல்கிதி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த தீப் கிரேஸ் எக்காவின் பெயர் இப்போது ஒட்டுமொத்த இந்தியாவாலும் அறியப்பட்டுள்ளது. அவரது தந்தை, தாய்மாமன், மூத்த சகோதரர்கள் அனைவருமே ஹாக்கி வீரர்கள் தான். ஆனால், குடும்பப் பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்ட ஹாக்கி விளையாட்டை எக்கா கையில் எடுக்க ஆரம்பத்தில் எதிர்ப்பு நிலவியது. அவர் ஹாக்கி விளையாட ஆரம்பித்தபோது ஒட்டுமொத்த ஊரும் அவரின் குடும்பத்தை வசைபாடியது. ஆனால் அது எதுவும் அவரது காதுகளில் விழவில்லை. 16 வயதில் சோன்பேட்டில் நடந்த சீனியர் தேசிய விளையாட்டில் கலந்து கொண்டார். 2014 ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம் வென்ற அணியில் இடம்பெற்றார். இன்று ஒலிம்பிக் அரங்கிலும் தனக்கென தனி முத்திரை பதித்துத் திரும்பியுள்ளார். ஊராரின் ஏச்சும் பேச்சும் அவருடைய வெற்றிப் பயணத்தைத் தடுக்கவில்லை.
4. சுசிலா சானு:
மணிப்பூர் தலைநகர் இம்பால் தான் சுசிலாவின் சொந்த ஊர். இவரது தந்தை வாகன ஓட்டுநர். தாய் இல்லத்தரசி. 11 வயதிலேயே ஹாக்கி மட்டையை கையில் எடுத்தவர் சுசிலா சானு. அவருக்கு ஆதரவாக, ஊக்கமளிப்பவராக இருந்துள்ளார் அவரது மாமன். மணிப்பூர் போஸ்டீரியர் ஹாக்கி அகாடமியில் அவரைச் சேர்த்துவிட்டுள்ளார். 2002 ல் இருந்தே பயிற்சி. ஆனாலும், மாநில அணியில் அவர் நீண்ட காலம் இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்தார். ஒரு கட்டத்தில் ஹாக்கியை விட்டுவிடலாமா என்று கூட யோசித்துள்ளார். ஆனால், அவருடைய சீனியர்கள் ஊக்கமளித்து அவரை விளையாட வைத்தனர். இன்று அவர் ஒலிம்பிக் அணியில் இடம்பெற்றுவிட்டார். ஊக்கமது கைவிடேல் என்பதும் வெற்றிக்கான தாரக மந்திரம் தான். சுசிலாவுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கடந்த 2010ல் டிக்கெட் கலெக்டர் வேலை கிடைத்தது.
5. வந்தனா கட்டாரியா
வந்தனா கட்டாரியா, இந்திய சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஹாக்கி ஸ்டிக்கால் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். வந்தனாவுக்கு குழந்தையாக இருந்த போதிருந்தே ஹாக்கி மீது ஆர்வம் அதிகம். ஆனால், அவர் பிறந்த உத்தர்காண்ட் மாநிலம் அதனை ஊக்குவிக்கவில்லை. ஹாக்கி ஸ்டிக் கூட இல்லாமல் உடைந்த மரக் கிளைகளைக் கொண்டு சுயமாக பயிற்சி செய்துள்ளார். ஊரே எதிர்த்தாலும் கூட அவரது தந்தை ஊக்குவித்துள்ளார். அவர் ஒரு மல்யுத்த வீரர். மகளின் கனவுக்குத் துணை நின்ற அவர் மூன்று மாதங்களுக்கு முன்னதாக இறந்தார். அப்போது வந்தனா தீவிர பயிற்சியில் இருந்ததால் தந்தையின் மறைவுகுக் கூட அவரால் வீட்டுக்கு வர முடியவில்லை. ஆனால், இன்று உலகமே போற்றும் நிலையில் இருக்கும் வந்தனா தனது தந்தைக்கு பெரும் பரிசைக் கொடுத்துள்ளார். இதைவிட பெரிய அஞ்சலியையும் வந்தனா செலுத்தியிருக்க முடியாது. ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் இந்திய ஹாக்கி வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். சாதி அவரைத் தடுக்கவில்லை.
6.குர்ஜித் கவுர்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் குர்ஜித் கவுர். அவர் வசித்த கிராமத்தில் ஹாக்கி வாடையே கிடையாது. முதன்முதலாக வீட்டிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கிப் படிக்க நேர்ந்தது. அப்போதுதான் அவருக்கு ஹாக்கி அறிமுகமானது. தானாகவே விளையாட ஆரம்பித்த அவருக்கு ஹாக்கி உயிர் மூச்சானது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது குர்ஜித் 22வது நிமிடத்தில் பெனால்டி கார்னரில் அடித்த கோல், மிகவும் முக்கியமானது. பல ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட தீவிரப் பயிற்சிக்கு அன்று பலன் கிடைத்தது. தூரம் அவருக்குத் தடையாக இல்லை.
7. சவீதா புனியா:
குழந்தையாக இருந்தபோது சவீதா தினமும் 30 கிலோமீட்டர் பயணித்து பள்ளிக்குச் செல்வார். பள்ளிக்குச் சென்றால் தான் முறையாக ஹாக்கி பயிற்சியைப் பெற முடியும் என்பதற்காகவே அவர் அந்த தூரத்தை கடந்து சென்றார். சவீதாவின் குடும்பத்தில் யாருக்கும் விளையாட்டு பின்னணி இல்லை, முதன்முதலில் சவீதா தனது விருப்பத்தைத் தெரிவித்தபோது ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியடைந்துள்ளது. ஆனாலும், அவரது தாத்தாவின் உதவியுடன் சவீதா ஹாக்கி விளையாட்டை மேற்கொண்டார். சவீதாவுக்கு ஊக்கம் குறைந்த போதெல்லாம் தாத்தாவின் வார்த்தைகள் டானிக்காக இருந்துள்ளன. குடும்ப நெருக்கடி அவரை ஒடுக்கிவிடவில்லை.
8. சலீமா டெடே:
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பட்கிசாபூர் தான் சலீமா டெடேவின் சொந்த ஊர். ஜார்க்கண்டில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம். அதுவும், சலீமாவின் ஊர் நக்சல் அச்சுறுத்தல் நிறைந்தது. அப்படிப்பட்ட கிராமத்திலிருந்து சலீமா இன்று சாதித்துள்ளார். அவர் ஊரில் ஹாக்கி பிரபலமான விளையாட்டு. அதனால், சலீமாவும் அதில் ஆர்வமானார். ஆரம்பத்தில் அவருக்கு ஹாக்கி ஸ்டிக் கிடைக்காததால், மரக் குச்சிகளைக் கொண்டு பயிற்சி செய்திருக்கிறார். 19 வயதில் ஒலிமிக் களம் கண்டிருக்கிறார். எங்கள் ஊரில் ஹாக்கி தான் எல்லாமே. எனது ஊரிலிருந்து இந்திய அணியில் இடம்பெற்ற முதல் பெண் நான் என்று பெருமிதத்துடன் சலீமா கூறுகிறார். வறுமை அவரைத் தடுக்கவில்லை.
கனவை நனவாக்க, சாதனை சிகரங்களைத் தொட எதுவுமே தடையில்லை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நம் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் என்று கூற இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்.