பி.சி.சி.ஐ ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறாத நடராஜன் - ரசிகர்கள் அதிருப்தி..
இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட 2021-ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தமிழக வீரர் நடராஜனின் பெயர் இடம்பெறவில்லை.
கடந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் ஹைதரபாத் அணிக்காக சிறப்பாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், தமிழக வீரர் நடராஜன். அவரது சிறப்பான பந்துவீச்சு காரணமாக இந்திய அணியில் இடம்பிடித்த அவர், ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளிலும் மிகச்சிறப்பாக பந்துவீசினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கப்பா டெஸ்ட் வெற்றிக்கு நடராஜனின் பந்துவீச்சும் காரணம் என்று பாராட்டிய மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, நடராஜனுக்கு ஒரு சொகுசு காரையும் பரிசாக வழங்கினர். தற்போது நடப்புத் தொடரிலும் ஹைதராபாத் அணியின் பிரதான பந்துவீச்சாளராக நடராஜன் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் 2021-ஆம் ஆண்டுக்கான தங்களது ஒப்பந்த வீரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பட்டியலில் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை. அதே சமயத்தில் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரின் பெயர் கிரேடு சி-இல் இடம்பெற்றுள்ளது. சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வந்த நடராஜன் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.