Mithali-Powar Spat: "அந்த விவகாரத்திலிருந்து நகர்ந்து விடலாமே" - மித்தாலி ராஜ் vs ரமேஷ் பவார் சர்ச்சை!
"நாங்கள் நன்றாக பேசி கொள்கிறோம், இல்லையெனில் மீண்டும் இந்திய மகளிர் அணி உள்ளே பயிற்சியாளராக வந்து இருக்க மாட்டேன்" - ரமேஷ் பவார்.
இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டவுடன், மித்தாலி ராஜ் - ரமேஷ் பவார் இருவரும் இணைந்து எப்படி இந்திய அணியை வழிநடத்த போகிறார்கள் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் எழுந்த ஒரே கேள்வி. அது குறித்து இந்திய ஒருநாள் மற்றும் & டெஸ்ட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் மற்றும் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவார் இருவரும் கூட்டாக விடை அளித்துள்ளனர்.
மித்தாலி ராஜ் vs ரமேஷ் பவார் இடையே என்ன பிரச்சனை - விவரம் அறிய : மிதாலி ராஜ் Vs ரமேஷ் பவார் : தீர்க்கப்படாத கணக்கு | Mithali Raj | Cricket
அவர்கள் இடையே வெடித்த கருத்து வேறுபாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மித்தாலி ராஜ் "நான் நினைக்கிறேன், அதிலிருந்து நகர்ந்து விடலாம் என்று, 3 ஆண்டுகள் கடந்துவிட்டது தற்போது 2021ல் இருக்கிறோம். வருங்காலம் என்ன என்பதை யோசிப்போம். பல கிரிக்கெட் தொடர்கள் வர இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியும், அதனால் தொடர்ச்சியாக இது குறித்து கேள்வி எழுப்பும் உங்களை கடந்த காலத்தில் இருந்து அழைத்து வர வேண்டிய நிலை இருக்கிறது" என்று தெரிவித்தார்.
அதே கேள்வி ரமேஷ் பவார் முன்னிலையில் வைக்கப்பட்ட போது "நாங்கள் நன்றாக பேசி கொள்கிறோம், இல்லையெனில் மீண்டும் இந்திய மகளிர் அணி உள்ளே பயிற்சியாளராக வந்து இருக்க மாட்டேன். 3 வருட காலத்தில் பிறகு அனைவரும் வளர்ந்திருப்போம், பெரிய இலக்குகள் தான் கண் முன்னே இருக்கின்றன. இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல எனக்கும், மித்தாலி ராஜுக்கும் இது மிக நல்ல வாய்ப்பு. நாங்கள் அனைவரும் தொழில்முறை விளையாட்டு வீரர்கள், தேசிய கிரிக்கெட் அகாடெமியில் ராகுல் டிராவிடுடன் இனைந்து பணியாற்றியுள்ளேன், அதன் தாக்கம் வரப்போகும் தொடர்களில் தெரியும்" என தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய மகளிர் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஆடவர் அணி இங்கிலாந்து செல்லும் பொது அவர்களுடன் சேர்ந்து பயணம் மேற்கொள்கின்றனர். இங்கிலாந்து தொடர் குறித்து பேசிய மித்தாலி ராஜ் "இந்திய ஆடவர் அணியும் இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொள்வது, எங்கள் சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு தீர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
>> தோனி கொடுத்த அட்வைஸ் - ஆட்டத்தை மாற்றிய ரவீந்திர ஜடேஜா!
கருத்து வேறுபாடுகள் களைந்து இருவரும் இணைந்து இந்திய அணியை வழிநடத்துகிறார்களா அல்லது மீண்டும் ஒரு பூகம்பம் வெடிக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.