Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
Rajya Sabha elections : ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் திமுக சார்பாக 4 பேரும் அதிமுக சார்பாக 2 பேரும் களம் இறங்கவுள்ளனர். எனவே வேட்பாளர் பட்டியில் இன்று மாலை வெளியாகவுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் ராஜ்யசபா தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் மத்தியில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக தமிழகம் மற்றொரு தேர்தலையும் எதிர்கொள்ளவுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி இடங்களுக்கான தேர்தல் தான் அது. அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்களான திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு ஆகியோரின் பதவிக்காலமும், அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட தம்பிதுரை மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பதவிகாலமும் முடிவடையவுள்ளது.
ராஜ்யசபா தேர்தல்- வேட்புமனு தாக்கல்
இதனையடுத்து வருகிற மார்ச் 16ஆம் தேதி ராஜ்யசபா தேர்தலானது நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளையோடு நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் திமுக மற்றும் அதிமுக சார்பாக வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கவில்லை. அதேநேரம் சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்க ராஜ்யசபா தேர்தல் திமுக மற்றும் அதிமுகவிற்கு பெரிய அளவில் கை கொடுத்து வருகிறது. இதன் படி அதிமுக கூட்டணியில் நீடித்து வந்த தேமுதிகவிற்கு அங்கு ராஜ்யசபா சீட் வழங்காத காரணத்தால் திமுக கூட்டணியில் இணைந்தது. இதனையடுத்து தேமுதிகவிற்கு ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ்
இதேபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கூடுதல் இடங்களை கேட்டு மிரட்டி வருகிறது. அந்த கட்சியையும் திமுக தங்கள் கூட்டணியில் இணைக்கவும் ராஜ்யசபா சீட் முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே கூட்டணியில் இடம்பெறுகிறதா.? இல்லையா.? என்பதை இன்றைக்குள் அறிவிக்க திமுக கெடு விதித்துள்ளது. எனவே இன்று மாலைக்குள் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்கிறதா.. இல்லையா என இன்று மாலை தெரியவரும். எனவே திமுக சார்பாக 4 இடங்கள் உள்ள நிலையில், இரண்டு இடத்தில் திமுக போட்டியிடவுள்ளது. அதில் திருச்சி சிவாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும், திமுக நிர்வாகி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அல்லது முன்னாள் எம்பி அப்துல்லா வாய்ப்பு கிடைக்கும் என தகவல் கூறுப்படுகிறது.
அதேநேரம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வரும்பட்சத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராஜ்யசபா சீட்டை கைப்பற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் போட்டி போட்டு வருகிறார்கள். திருநாவுக்கரசர். சுதர்சனம் நாச்சியப்பன், தங்கபாலு போன்ற முன்னனி தலைவர்கள் முயன்று வருகிறார்கள். எனவே இன்று மாலை யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்ற முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது.
அதிமுக வேட்பாளர்கள் யார்.?
இதேபோல அதிமுக சார்பாக 2 பேரை ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்ய முடியும் என்பதால் மீண்டும் தற்போதைய எம்பி தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு நபராக அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில், அன்புமணிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அன்புமணிக்கு வாய்ப்பு இல்லையென்றுஃ அடுத்த முறை வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. எனவே அதிமுக சார்பில் மற்றொரு மூத்த நிர்வாகி ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஒப்பதல் பெறப்பட்டு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.























