KKR's Prasidh Krishna tested positive for COVID-19: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், 4வது வீரருக்கு கொரோனா தொற்று உறுதி
வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்காவது வீரரானார்.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது ஐபிஎல் போட்டிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் இன்றி பாதுகாப்பான பயோ பபிள் சூழலில் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், பூட்டிய மைதானத்திற்கு உள்ளேயும் கொரோன நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதே போட்டிகள் நிறுத்தப்பட காரணமாக அமைந்தது.
முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள், ‘மிஸ்டிரி ஸ்பின்னர்’ வருண் சக்கரவர்த்தி, பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் மற்றும் நீயூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டது. இவர்களை தவிர்த்து பரிசோதனை செய்து கொண்ட மற்ற கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா இல்லை என தகவல் வெளியானது.
அதனை தொடர்ந்து, ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பான முறையில் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், மற்றொரு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரரான, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொல்கத்தா அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நான்காவது வீரரானார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் விவரத்தை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கே.எல் ராகுல், சஹா ஆகியோர் உடற்தகுதி நிரூபணம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இம்முறை 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூடுதலாக 4 வீரர்கள் சப்ஸ்டியூட்டாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அந்த பட்டியலில், பிரசித் கிருஷ்ணா சப்ஸ்டியூட் வீரராக இடம் பெற்றிருந்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரையும் கருத்தில் கொண்டு இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்கான பயோ-பபிள், லண்டனில் ஜூன் 2-ம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இன்னும் 20 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில், விரைவில் பிரசித் கிருஷ்ணா உடல் நலம் குணமடைந்து அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.