IPL 2024 Controversy: ஐ.பி.எல் சீசன் 17! சர்ச்சை சம்பவங்கள்! விவரம் உள்ளே!
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்பாக இந்த போட்டிகள் நடைபெற்றாலும் இதில் சில நேரங்களில் சர்ச்சைக்குரிய சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த சீசனில் நடந்த சர்ச்சையான விசயங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்
சஞ்சு சாம்சன் கேட்ச்:
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று நடைபெற்ற 56 வது லீக் போட்டியில் விளையாடின. இந்த போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்கள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.
பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதில் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க பின்னர் வந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அதேநேரம் இவர் சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். முகேஷ் குமார் வீசிய பந்தை அவர் தூக்கி அடித்தார். அப்போது அங்கு பவுண்டரி லைனில் நின்றிருந்த ஷாய் ஹோப் சர்ச்சையான முறையில் கேட்ச் பிடித்தார். கள நடுவரிடம் முறையிட்டும் பலனில்லாமல் கடைசியில் நடையை கட்டினார் சஞ்சு சாம்சன். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி விக்கெட்டில் சர்ச்சை:
கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங்க் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து. அந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது.
முன்னதாக இந்த போட்டியின் போது விராட் கோலி விக்கெட்டில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி களம் இறங்கினார்கள். இதில் 7 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரிகளை விளாசி 18 ரன்கள் எடுத்த கோலி ஹர்ஷித் ராணா வீசிய ஸ்லோ ஃபுல்டாஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். ஹர்ஷித் ராணா வீசிய ஸ்லோ ஃபுல்டாஸ் பந்தை விராட் கோலி கிரீசுக்கு வெளியே இறங்கி வந்து ஆட, அது எதிர்பாராத விதமாக ராணாவிடமே கேட்ச் ஆகிவிட்டது.
கள நடுவரும் அதற்கு அவுட் கொடுத்து விட்டார். பந்து இடுப்பு உயரத்திற்கு மேலே சென்றதால் சந்தேகத்தின் அடிப்படையில் கோலி ரிவுயூ கேட்டார். அதன்படி, ஹாக்ஐ தொழில்நுட்பம் மூலம் பந்து செல்லும் கோணத்தையும், விராட் கோலி அதனை எதிர்கொண்ட கோணத்தையும் வைத்து நடுவர்கள் ஆய்வு செய்தனர். இடுப்பு உயரத்திற்கு மேலே நோ பால் என்ற அறிவிப்பு, வீசப்பட்ட பந்தானது பேட்ஸ்மேன் கிரீஸின் உள்ளே இருக்கும் போது, இடுப்பு உயரத்திற்கு மேலே வந்தால் மட்டுமே பொருந்தும். மாறாக, இந்த விஷயத்தில் விராட் கோலி கிரீஸை விட்டு வெளியே இருந்து பந்தை எதிர்கொண்டதால், பந்து பின்னே செல்லும் போது உயரம் குறைந்துவிடும் என ஹாக்ஐ தொழில்நுட்பம் காட்டியது. இதனால் விராட் கோலியின் அவுட்டை நடுவர்கள் உறுதி செய்து அறிவித்தனர். ஆனாலும் விராட் கோலியின் இந்த விக்கெட் சர்ச்சையாக மாறியது குறிப்பிடத்தக்கது.
டாஸ் போடுவதில் ஏற்பட்ட சர்ச்சை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி மே 3 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா 169 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை 145 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து, கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மும்பை அணியின் அடுத்தசுற்று வாய்ப்பையும் தகர்த்தது.
முன்னதாக, இந்தப் போட்டியின்போது மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, காயினை மேலே சுண்டினார். ஆனால், மேட்ச் ரெஃப்ரி, அவசரப்பட்டு கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டும் முன் கையில் எடுத்துவிட்டார். அதாவது, கேமரா வந்து கவர் செய்வதற்குள்ளேயே ரெஃப்ரி அந்த காயினை எடுத்துவிட்டார். ஏற்கெனவே ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் போடும்போது யார் டாஸ் வென்றார்கள் என கீழே விழுந்த காயினை கேமராவின் மூலம் நேரலையில் காட்ட வேண்டும் என்று கூறப்பட்டது.
மற்ற போட்டிகளில் எல்லாம் டாஸுக்குப் பயன்படுத்திய காயின் நேரலையில் காட்டப்பட்ட நிலையில், மும்பை அணி விளையாடிய அந்த போட்டியில் காட்டவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் டாஸில் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறினர். ஏற்கெனவே, நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி இதேபோன்று டாஸில் ஏமாற்று வேலைசெய்ததாக ஒருமுறை சர்ச்சை எழுந்தது கவனிக்கத்தக்கது.