கடைசி டெஸ்ட் போட்டி : நாளையாவது களமிறக்கப்படுவாரா அஸ்வின்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது அஸ்வின் விளையாடுவாரா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக அந்த நாட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று வருகிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், தொடரை இந்தியா கைப்பற்றுமா? அல்லது இந்த தொடரை இங்கிலாந்து சமன் செய்யுமா? என்பதை தீர்மானிக்கும் 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை அந்த நாட்டில் உள்ள ஓல்ட் டிராபோர்டடில் தொடங்க உள்ளது.
இந்த தொடர் தொடங்கியது முதல் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ஒரு போட்டியில் கூட இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரவிச்சந்திர அஸ்வினின் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான செயல்பாடுகளை கீழே விரிவாக காண்போம். அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 6 டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்திலும், 13 டெஸ்ட் போட்டிகள் இந்தியாவிலும் நடைபெற்றவை.
இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை அஸ்வின் 2012ம் ஆண்டு விளையாடினார். இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 88 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவற்றில் 6 முறை 5 விக்கெட்டுகளையும், ஒரு முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவற்றில் இங்கிலாந்தில் மட்டும் விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
பேட்டிங்கை பொறுத்தவரை இங்கிலாந்திற்கு எதிராக ஆடிய 19 டெஸ்ட் போட்டிகளில் 31 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ளார். அதன்மூலம் ஒரு சதம் மற்றும் 6 அரைசதங்கள் உள்பட 970 ரன்களை குவித்துள்ளார். இவற்றில், இங்கிலாந்து மண்ணில் மட்டும் தான் ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 232 ரன்களை குவித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக தன்னுடைய அதிகபட்ச ஸ்கோராக 106 ரன்களை அஸ்வின் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு இங்கிலாந்திற்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அஸ்வினுக்கு நாளைய போட்டியிலாவது இடம் கிடைக்குமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியில் தற்போது ரவீந்திர ஜடேஜா மட்டுமே சுழற்பந்து வீச்சாளராக இடம்பிடித்து ஆடி வருகிறார். இதுவரை போட்டி நடைபெற்ற 4 மைதானங்களிலும் இரு அணிகளிலும் வேகப்பந்து வீச்சாளர்களே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் இதுவரை 79 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 413 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு டெஸ்ட் போட்டியில் 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 2 ஆயிரத்து 685 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 831 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.