Muttiah Muralitharan Health: முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் : அப்போலோ மருத்துவமனை தகவல்
Muthiah Murlitharan Health Update: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து ஜாம்பவனுமானவர் முத்தையா முரளிதரன். இவர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, மார்க் வாக், ஸ்டீவ் வாக், சயித் அஃப்ரிடி, இன்ஜமாம் உல் ஹாக், கிப்ஸ் உள்ளிட்ட வீரர்களை தன் சுழற்பந்து வீச்சால் மிரள வைத்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது மாயஜால சுழற்பந்து வீச்சால் அணிக்கு அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார்.
சர்வதேச போட்டிகளை தவிர, ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார். தற்போது, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். பயற்சியாளராக முத்தையா முரளிதரன் அந்த அணிக்கு பெரிய அளவில் பலம் சேர்த்து வருகிறார். அவரது பந்து வீச்சு பயிற்சியில் ஐதராபாத் பவுலர்கள் ஜொலித்து வருகிறார்கள். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களால் ஐதராபாத் அணி பலமடைந்து வருகிறது.
14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 9ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. முதல் லீக் போட்டிகள் சென்னையிலும், மும்பையிலும் நடைபெற்று வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடருக்காக சென்னையில் இருந்து வருகிறது. இந்நிலையில், அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், முத்தையா முரளிதரன் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 49 வயதான முத்தையா முரளிதரன் இருதய சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்தையா முரளிதரன் உடன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உடன் இருக்கின்றனர்.
இதையடுத்து, முத்தையா முரளிதரன் விரைவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணைவார் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது. மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முரளிதரனின் வருகையை எதிர்பார்த்து ஐதராபாத் அணியினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Also Read: உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் முத்தையா முரளிதரன் அனுமதி