New Movies Released: வீக் எண்ட்டில் பார்க்க சரியான படம் எது? இந்த வாரம் ரிலீஸான படங்களின் லிஸ்ட் இதோ..!
இந்த வார இறுதியில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் வெளியாகியுள்ள படங்களின் விவரங்களை அறியலாம்.
இந்த வார இறுதியில் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் வெளியாகியுள்ள படங்களின் விவரங்களை அறியலாம்.
வார இறுதி கொண்டாட்டம்:
வாரம் முழுவதும் வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் மக்கள், வார இறுதியில் கிடைக்கும் விடுமுறையை குடும்பத்துடன் செலவழிக்கவே விரும்புகின்றனர். பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்வதோடு, சினிமா காண்பதையும் முக்கிய பொழுதுபோக்காக வைத்துள்ளனர். அந்த வகையில் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த வாரத்தில் 3 முக்கிய தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது. அதோடு, ஒரு முக்கியமான ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகியுள்ளது.
டக்கர்:
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'டக்கர்’. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
போர்த்தொழில்:
கரடுமுரடான உயர் க்ரைம் ப்ரான்ச் அதிகாரி லோகநாதன் (சரத்குமார்) தலைமையின் கீழ், விளையாட்டுப்பிள்ளை லுக்கில், புத்தக அறிவு மேலோங்கிய பிரகாஷ் (அசோக் செல்வன்) புதிதாக போஸ்டிங் வாங்கிச் சென்று இணைகிறார். இந்நிலையில், திருச்சியை மையமாக வைத்து, ஒரே மாதிரியான தொடர் கொலைகள் எந்தவித தங்கு தடயமுமின்றி அரங்கேறி மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன. இந்த வழக்கு அசோக் செல்வன் - சரத்குமார் இணையின் கைகளுக்கு வர, தொட்டதுக்கெல்லாம் கடுப்படிக்கும் சரத்குமாரின் தலைமையின் கீழ், அசோக் செல்வன் கடுப்புடன் கடமையாற்ற வருகிறார். இந்த கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் போர்த்தொழில்.
விமானம்:
நடிகர் சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், ராகுல் ராமகிருஷ்ணா, அனுசுயா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் விமானம். சிவ ப்ரசாத் யானலா இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு சரண் அர்ஜூன் இசையமைத்துள்ளார். சென்னை குடிசைப்பகுதிகளில் கட்டணக் கழிப்பறை நடத்தி சம்பாதிக்கும் மாற்றுத்திறனாளி அப்பா சமுத்திரக்கனி. அம்மாவை இழந்த அவரது மகனுக்கு விமானம் என்றால் கொள்ளைப் பிரியம். விமானத்தில் பயணிக்க வேண்டும், பைலட் ஆக வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறியதா என்பது தான் படத்தின் பாசக்கதை.
டிரான்ஸ்பார்மர்ஸ்: தி ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்
உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்ட டிரான்ஸ்பார்மர் படத்தின் தொடர்ச்சியாக, தி ரைஸ் ஆஃப் தி பீஸ்ட் படமும் வெளியாகியுள்ளது. ஆட்டோபாட்ஸ் மற்றும் மேக்ஸிமல்ஸ் எனும் இரண்டு டிரான்ஸ்பார்மர்ஸ் குழுக்கள் இணைந்து, டெர்ரர் கான்ஸ் எனும் குழுவின் உலகை அழிக்கும் முயற்சியை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. சிறுவர்களை இப்படம் வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.