2022 மகளிர் உலகக்கோப்பை: பாகிஸ்தானை எதிர்த்து முதல் போட்டியில் களமிறங்கும் இந்திய சிங்கப்பெண்கள் !
2022ஆம் ஆண்டு மகளிர் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
மகளிருக்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் சர்வதேச தரவரிசை அடிப்படையில் அணிகள் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 8 அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதனால் அனைத்து அணிகளும் ஒரு முறை முதலில் மோதுகின்றன. அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறும். இறுதி போட்டி வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியை மார்ச் மாதம் 6ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. அதைத் தொடந்து 10ஆம் தேதி நியூசிலாந்து அணியையும், 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியையும், 16ஆம் தேதி இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்கிறது. அதன்பின்னர் 19ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும், 22 ஆம் தேதி பங்களாதேஷ் அணியையும், 27ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்த்து விளையாடுகிறது. முதல் சுற்று போட்டிகளுக்கு பிறகு 30,31ஆம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 3ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
🚨The #CWC22 dates are out.
— BCCI Women (@BCCIWomen) December 15, 2021
Let's get behind #TeamIndia💪 pic.twitter.com/txjkg3tPQU
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. எனவே இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று இந்திய மகளிர் அணியின் ஜாம்பவான் வீராங்கனை மித்தாலி ராஜ் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் மகளிர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவரை கோப்பையுடன் இந்திய அணி வழி அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: முரண்படும் கங்குலி, கோலியின் கருத்துகள்.. என்னதான் நடக்குது இந்திய கிரிக்கெட் அணியில்?