விவசாயிகளே மிஸ் பண்ணாதீங்க... வேளாண் துறை அட்வைஸ் எதற்காக?
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம் உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் கோடை உழவு மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்: விவசாயிகளே மிஸ் பண்ணாதீங்க... தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவதை பயன்படுத்தி கோடை உழவை மேற்கொள்ளலாம் என்று வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கோடை உழவு என்பது கோடை காலத்தில் செய்யப்படும் வேளாண்மை பணி ஆகும். கோடை காலத்தில் மழை குறைவாக இருக்கும். கால்வாய்ப் பாசன வசதி பெறும் ஊர்களில் கால்வாயிலும் நீர் வரத்து இருக்காது. பம்ப்செட் பாசன வசதி உள்ளவர்கள் மட்டுமே கோடை உழவு செய்ய முடியும். மற்றவர்கள் நிலத்தைத் தரிசாக விடுவர். சிலர் தரிசாக இருக்கும் நிலத்தில் மானாவாரிப் பயிர்களை இடுவர். எள், பயறு வகைகள், கேழ்வரகு, குதிரைவாலி போன்றவை கோடை விவசாயத்தில் பயிரிடப்படுகின்றன.
கோடை உழவு செய்வதால் மண்வளம் அதிகரிக்கும். நைட்ரஜன் நிலைப்படுத்தப்படும். பயிர்களைப் பயிரிடுதல் அடுத்த சாகுபடிக்கான உரத்தேவையைக் குறைக்கும். நீரை நிலத்தில் தக்க வைக்கும். பூச்சித் தொல்லையைக் குறைக்கும். கோடை உழவு செய்வதால் பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கோடை உழவு செய்யப்படாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டங்களும் விரையமாகும், கோடை உழவில் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் சேகரிக்கப்படுவதால் நிலப்பரப்பின் கீழ் ஈரப்பதம் காத்து பூச்சிகள் மற்றும் பூஞ்சானங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
கோடை உழவு செய்வதால் முன் பருவ விதைப்புக்கு ஏதுவாகிறது, ஏற்கனவே உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாவதோடு, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் கூடுவதோடு விளைச்சலும் அதிகரிக்கும். கோடையில் உழுவதால் மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு பறவைகளுக்கு இரையாக்கப்பட்டும், வெயிலிலும் கொல்லப்படுகிறது. மேலும் களைகளின் வேர்ப்பகுதி களையப்பட்டு முளைப்புதிறன் வெகுவாக குறைக்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் இந்த காலநிலையை பயன்படுத்தி நிலத்தை வளமான நிலமாக மேம்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி கோடை சாகுபடி செய்பவர்கள் வயலை உழுது தயார்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம் உட்பட பல பகுதிகளில் விவசாயிகள் கோடை உழவு மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பாய் நாற்றங்கால் வாங்கி சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கடந்த 2 நாட்களாக தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருவதால் மற்ற விவசாயிகளும் தங்களின் வயலை உழும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கோடை உழவு மேற்கொள்ளாத விவசாயிகள் தங்களின் வயலை உழுது மட்டும் தயார் படுத்துகின்றனர். இதனால் மண் வளம் மேம்படும். மேலும் குறுவை சாகுபடியின் போது களைகள் அதிகம் இருக்காது. இதனால் இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் ஏதுவாக அமைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

