Jasprit Bumrah: ஜஸ்ப்ரித் பும்ரா.. சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்குவாரா? மாட்டாரா? பிசிசிஐ இன்று இறுதி முடிவு
Jasprit Bumrah: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

Jasprit Bumrah: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் களமிறங்குவது குறித்து பிசிசிஐ இன்று இறுதி முடிவெடுக்கிறது.
சாம்பியன்ஸ் ட்ராபி 2025:
ஹைப்ரிட் முறையில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி, வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 15 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்திய அணியின் முதல் போட்டி 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களின் பட்டியலை இறுதி செய்ய இன்றே கடைசி நாளாகும். எனவே, முதுகு வலியால் அவதிப்பட்டு வரும், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சாம்பியன்ஸ் ட்ராபிக்கான அணியில் இருப்பாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பிசிசிஐ இன்று இறுதி பதிலளிக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக சாம்பியன்ஸ் ட்ராபிக்கான பிசிசிஐயின் உத்தேச வீரர்களின் பட்டியலில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பும்ரா.. அணியில் இருப்பாரா? மாட்டாரா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பும்ரா பெயர் இடம்பெற்று இருந்தது. தொடரின் கடைசி போட்டியில் அவர் களமிறங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகினார். இந்நிலையில், பும்ராவுக்கு முதுகில் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அதனை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு BCCI இன் மருத்துவ ஊழியர்கள், தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். ஒருவேளை அவர் முழு உடற்தகுதியுடன் அணிக்கு தேர்வானால், 31 வயதான பும்ரா அடுத்த இரண்டு நாட்களில் மறுவாழ்வுப் பயிற்சியைத் தொடங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயம் காரணமாக ஒருவேளை அவருக்கு ஓய்வளிக்கப்பட்டால், அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையலாம்.
பும்ராவிற்கு மாற்று யார்?
பவுலிங் யூனிட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பும்ரா ஒருவேளை, தொடரிலிருந்து விலகினால் அவருக்கான மாற்று வீரரை தேடும் பணியிலும் பிசிசிஐ களமிறங்கியுள்ளது. அதன்படி, பும்ராவிற்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அல்லது முகமது சிராஜ் அணியில் இணைக்கப்படலாம். இவர்களைத் தவிர, பிரஷித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரை அஜித் அகர்கர் தலைமையிலான சீனியர் ஆண்கள் தேர்வுக் குழு பரிசீலிக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரிலும், ஷமியுடன் சேர்ந்து ராணா தொடக்க ஓவர்களை வீசி வருகிறார்.
பும்ராவின் ஒருநாள் பயணம்:
ஜனவரி 23, 2016 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமான பும்ரா, இதுவரை 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக நவம்பர் 19, 2023 அன்று அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கிய பும்ரா, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி போட்டியின் போது,பும்ரா காயமடைந்து ஓய்வெடுத்து வருகிறார்.
சாம்பியன்ஸ் ட்ராபிக்கான இந்தியாவின் உத்தேச அணி:
ரோகித் சர்மா (கே), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, யஷஷ்வி ஜெய்ஷ்வால், ரிஷப் பண்ட்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

