IND vs SA T20: சொந்த மண்ணில் தொடரை வென்றதில்லை வரலாற்றை மாற்றுமா இந்தியா? தென்னாப்பிரிக்காவுடன் நாளை மோதல்..
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 நாளை இரவு 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இதுவரை நடைபெற்றுள்ள டி20 தொடர்களில் எப்படி முடிவுகள் இருந்துள்ளது தெரியுமா?
இந்தியாவில் தொடரை இழக்காத தென்னாப்பிரிக்கா:
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது வரை 3 டி20 தொடர்களில் விளையாடி உள்ளது. அவற்றில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று இருந்தன. அந்தத் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
All set for the #INDvSA T20I series. 👏#TeamIndia | @mastercardindia pic.twitter.com/UR4erC0zP4
— BCCI (@BCCI) September 27, 2022
இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா-தென்னாப்பிரிக்கா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. அதில் இரு அணிகளும் தலா 2-2 என வெற்றி பெற்று இருந்தன. அப்போது 5வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதன்காரணமாக அந்தத் தொடரும் 2-2 என சமனில் முடிந்தது. இதன்மூலம் தற்போது வரை இந்தியாவில் நடைபெற்றுள்ள டி20 தொடரை தென்னாப்பிரிக்கா அணி இழந்ததே இல்லை. அத்துடன் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா ஒரு முறை கூட கைப்பற்றாத சோகம் தொடர்ந்து வருகிறது. இந்த முறையாவது அந்த கனவை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா:
அணி | வெற்றி | தோல்வி | முடிவில்லை |
இந்தியா | 11 | 8 | 3 |
தென்னாப்பிரிக்கா | 8 | 11 | 3 |
இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரராக கேப்டன் ரோகித் சர்மா உள்ளார். இவர் தற்போது வரை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 362 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரை புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 14 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் தற்போது வரை 22 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளன. அவற்றில் இந்தியா 11 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.