கிறிஸ் கெயிலின் நெருங்க முடியாத சாதனை
எந்த அணிக்காக விளையாடினாலும், எந்த நாட்டுக்காக விளையாடினாலும் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கொள்ளையடிக்க ஒரு சில வீரர்களால் மட்டுமே முடியும். ஒரு சில வீரர்களின் விளையாட்டை மட்டுமே எதிரணி வீரர்களே ரசிப்பார்கள்.
எதிரணி வீரர்களாலும், அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்படுபவர் கரிபீயனின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில். ரசிகர்களால் செல்லமாக `யுனிவர்ஸ் பாஸ்’ என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயிலின் சாதனைகளை பட்டியலிட்டு பார்த்தால், அந்த பெயர் அவருக்கு எவ்வளவு பொருத்தமானது என்பது புரியும்.
ஐ.பி.எல். தொடரில் 2009ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக முதன்முறையாக களமிறங்கினார் கிறிஸ் கெயில். அந்த தொடரில் 7 ஆட்டங்களில் ஆடிய கெயில் 171 ரன்களை மட்டுமே அடித்தார். அடுத்தாண்டு நடைபெற்ற தொடரிலும் கொல்கத்தா அணிக்காக 9 ஆட்டங்களில் 292 ரன்களை மட்டுமே கெயில் சேர்த்தார். அவரது ஆட்டத்தில் திருப்தியடையாத கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை 2011ம் ஆண்டுக்கான தொடரில் இருந்து கழட்டிவிட்டது. ஆனால், அவரை கழட்டிவிட்டதற்காக அடுத்து கொல்கத்தா அணி நிர்வாகம் நிச்சயம் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர்களில் வருத்தப்பட்டிருக்கும்.
2011ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் டிரிக் நான்னிஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். அவர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியதால், அவருக்கு பதிலாக மாற்று வீரராக கிறிஸ் கெயிலை மிக குறைந்த தொகையில் பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.
தான் தோற்ற இடத்தில் மீண்டும் தன்னை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தால் யாராக இருந்தாலும் தனி உத்வேகத்துடன்தான் செயல்படுவார்கள். அதுவும் விளையாட்டு வீரர்கள் முழு உத்வேகத்துடனே களமிறங்குவார்கள். 2011ம் ஆண்டு தன்னை கழட்டிவிட்ட கொல்கத்தா அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் பெங்களூர் அணிக்கான தனது பயணத்தை தொடங்கினார்.
பெங்களூர் அணிக்கான முதல் ஆட்டத்திலே கிறிஸ் கெயில் 55 பந்துகளில் 102 ரன்களை குவித்து பெங்களூர் அணியை வெற்றி பெறவைத்தார். அதே தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக 49 பந்துகளில் 107 ரன்களை குவித்தார். அந்த தொடரில் பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றாவிட்டாலும், ரசிகர்கள் மனம் முழுவதையும் கெயில் கைப்பற்றினார். 2011 தொடரில் 2 சதங்களுடன் 608 ரன்களை குவித்து, அந்தாண்டுக்கான ஐ.பி.எல், தொடரின் நாயகன் என்ற பட்டத்தையும் வென்றார்.
2012, 2013 ஐ.பி.எல். தொடரில் கிறிஸ் கெயிலுக்கு பந்துவீசவே எதிரணி பந்துவீச்சாளர்கள் மிகவும் அச்சப்பட்டனர். வீசும் பந்துகள் பெரும்பாலும் மைதானத்தின் கூரைகளுக்கே பறந்தன. 2012ம் ஆண்டு தொடரில் 15 ஆட்டங்களில் விளையாடிய கிறிஸ் கெயில், 1 சதம் 7 அரைசதங்களுடன் மொத்தம் 733 ரன்களை குவித்தார்.
2013ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான விருந்து என்றே சொல்லாம்.
அன்று முதலில் பேட் செய்வதற்காக களத்தில் இறங்கிய கிறிஸ் கெயில், ஒரு ராட்சசனாகவே 20 ஓவர்களும் களத்தில் நின்றார். முதல் ஓவரில் மட்டுமே நிதானத்தை கடைபிடித்த கெயில், அடுத்தடுத்த ஓவர்களில் சூப்பர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ரன்களை சேகரித்தார். மிட்செல் மார்ஷின் ஒரே ஓவரில் மட்டும் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரிகளை அடித்தார்.
யார் பந்துவீசினாலும் அடிக்கிறாரே என்று நொந்து போன ஆரோன் பிஞ்ச், தானே பந்துவீசினார். ஆனால், ஏன் பந்துவீசினோம் என்று நொந்து போகும் அளவுக்கு கெயில் அவர் ஓவரை காட்டடி காட்டிவிட்டார். பிஞ்சின் ஒரே ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள், 1 போர் என 29 ரன்களை குவித்துவிட்டார். வெறும் 30 பந்துகளில் கெயில் சதமடித்துவிட்டார்.
இந்த 30 பந்தில் 7 டாட் பால், 4 ஒரு ரன்கள், 8 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள். மொத்தத்தில் 23 பந்துகளிலே கெயில் சதமடித்துவிட்டார். ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலே மிக அதிவேகமான சதம் என்பது இதுதான். சதமடித்த பிறகு இன்னும் ராட்சசான கெயில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 17 சிக்ஸர்களுடன் 175 ரன்களை குவித்தார். இன்று வரை ஐ.பி.எல், ஆட்டத்தில் தனி நபரின் அதிகபட்சம் இதுதான். மொத்தமாக அந்த போட்டியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 263 ரன்களை குவித்திருந்தது.
கெயில் என்றாலே பந்துவீச்சாளர்களே பயப்படும் அளவிற்கு ராஜாங்கம் நடத்திய கெயில், 2014ம் ஆண்டு 9 ஆட்டங்களில் விளையாடி வெறும் 196 ரன்களை மட்டுமே சேர்த்தார். அடுத்தாண்டு நடைபெற்ற தொடரில் ஒரு சதத்துடன் 491 ரன்களை குவித்தார்.
ஆனால், அடுத்த இரு தொடர்களும் கெயிலுக்கு மறக்க வேண்டிய தொடராகவே அமைந்தது. 2016ம் ஆண்டு 10 ஆட்டங்களில் விளையாடி வெறும் 227 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 2017ம் ஆண்டு 9 ஆட்டங்களில் விளையாடி 200 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால், பெங்களூர் அணியின் ஒரு அடையாளமாகவே கருதப்பட்ட கெயில் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.
வயது, பார்மில்லை என்று ஓரங்கட்டப்பட்டாலும் கிறிஸ் கெயில் மீது நம்பிக்கை வைத்த பஞ்சாப் அணி, அவரை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் 11 ஆட்டங்களில் ஆடி 368 ரன்களை குவித்தார். இந்த தொடரில் மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயில் தனது 300வது சிக்ஸரை அடித்தார். 2019ம் ஆண்டு தனக்கு இன்னும் வயது ஆகவில்லை என்பதை மீண்டும் தனது பேட்டால் நிரூபித்தார் கெயில். அந்த தொடரில் 13 ஆட்டங்களில் விளையாடிய கெயில், மொத்தம் 490 ரன்களை குவித்தார். அந்த தொடரில் மட்டும் 4 அரைசதங்களை அடித்தார். தனது அதிகபட்ச ரன்னாக 99 ரன்களை அந்த தொடரில் பதிவு செய்தார்.
ஐ.பி.எல். மூலம் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் யுனிவர்ஸ் பாசாக திகழும் கெயில், சிக்ஸர்கள் சாதனையில் இமயமலை போல மற்ற வீரர்களை காட்டிலும் உயர்ந்து நிற்கிறார்.
இதுவரை ஐ.பி.எல்.லில் மட்டும் 133 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயில் 351 சிக்ஸர்கள் அடித்து யாருமே நெருங்க முடியாத இடத்தில் உள்ளார். 2021 ஐ.பி.எல், தொடர் தொடங்கும் முன்னர் 349 சிக்ஸர்கள் அடித்திருந்த கெயில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு சிக்ஸர்கள் அடித்து 350வது சிக்ஸரை கடந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள மற்றொரு அதிரடி மன்னன் ஏபி டிவிலியர்ஸ் 171 ஆட்டங்களில் விளையாடி 237 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார்.
கெயில் அடித்துள்ள சிக்ஸர்களில் பெங்களூர் அணிக்காக மட்டுமே 239 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்னும் 14 சிக்ஸர்கள் அடித்தால் பெங்களூர் அணிக்காக மட்டுமே கெயில் 100 சிக்ஸர்களை அடித்துவிடுவார். மொத்தமாக 133 ஆட்டங்களில் விளையாடி 4 ஆயிரத்து 812 ரன்களை குவித்திருப்பதுடன், 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். போட்டிகளிலே அதிக ரன் குவித்த வீரரான விராட் கோலியே 194 போட்டிகளில் விளையாடிதான் 5 ஆயிரத்து 944 ரன்களை குவித்துள்ளார்.
ஸ்டான்ட்போர்ட் சூப்பர்ஸ்டார்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐ.சி.சி. உலக லெவன், மேற்கிந்திய தீவுகள், மேற்கு ஆஸ்திரேலியா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சிட்னி தண்டர், பரிசல் பர்னர்ஸ், சோமர்செட், யுவா நெக்ஸ்ட், தாகா கிளாடியேட்டர்ஸ், ஜமைக்கா டல்லவாஸ், டால்பின்ஸ், லயன்ஸ், பரிசல் புல்ஸ், மெல்போர்ன் ரெனேகெட்ஸ், லாகூர் காலண்டர்ஸ், சிட்டகாங் வைகிங், கராச்சி கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ், கேப்டவுன் நைட் ரைடர்ஸ், ரங்பூர் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், வான்கோவூர் நைட்ஸ், யூடபிள்யூ வைஸ் சான்சிலர் லெவன், பாக் லெஜண்ட்ஸ்,ஜோசி ஸ்டார், கேரள நைட் ஆகிய அணிகளுக்காக இதுவரை விளையாடியுள்ள கிறிஸ் கெயில் டி20 கிரிக்கெட் வரலாற்றிலே யாருமே தொட முடியாத அளவிற்கு மொத்தமாக 1000 சிக்ஸர்களை அடித்து கிரிக்கெட் வரலாற்றிலே அதிக சிக்ஸர்கள் அடித்தவராக திகழ்கிறார். உயரத்தில் மட்டுமின்றி சாதனைகளிலும் உயர்ந்தவரான கிறிஸ் கெயிலுக்கு வயது என்பது என்றுமே ஒரு எண்ணாக மட்டுமே உள்ளது.