T20 WC IND vs SA: மகாமட்டமான தோல்வி.. இந்தியாவை சுருட்டி வீசிய தென்னாப்பிரிக்கா! காலை வாரிய கடப்பாரை பேட்டிங்!
டி20 உலகக்கோப்பையில் இந்தியா சூப்பர் 8 சுற்றில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது.

டி20 உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் முடிந்து சூப்பர் 8 போட்டிகள் நேற்று தொடங்கியது. இன்று அகமதாபாத்தில் நடந்த போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி டேவிட் மில்லர், ப்ரெவிஸ், ஸ்டப்ஸின் அதிரடியால் இந்தியாவிற்கு 188 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
டக் அவுட்டான இஷான்:
தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன் - அபிஷேக் சர்மா ஆட்டத்தை தொடங்கினர். முதல் ஓவரை கேப்டன் மார்க்ரம் வீசினார். லீக் போட்டிகளில் இந்திய அணிக்கு தூணாக திகழ்ந்த இஷான்கிஷன் அந்த ஓவரில் டக் அவுட்டானார்.
லீக் போட்டிகள் முழுவதும் டக் அவுட்டான அபிஷேக் சர்மா இந்த முறை பொறுமையாக ஆடினார். ஆனால், அடுத்து வந்த திலக் வர்மா 1 ரன்னில் அவுட்டாக, சில நிமிடங்களில் 12 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்த அபிஷக் சர்மாவும் அவுட்டாக 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
தடுமாறிய இந்தியா:
இதையடுத்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தனர். மைதானம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க வாஷிங்டன் சுந்தர் 11 ரன்னில் அவுட்டாக, நிதானமாக ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
51 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்தியா இழக்க துபே - பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். கடைசி 44 பந்துகளில் 109 ரன்கள் தேவை என்ற நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டது. யான்சென், ரபாடா, போஸ்ச், நிகிடி கட்டுக்கோப்பாக வீசினார்கள்.
உறுதியான தோல்வி:
இதனால், கடைசி 6 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்தாக வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டது. இதனால், அதிரடியாக ஆட வேண்டிய நெருக்கடிக்கு ஆளான ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர் அடிக்க முயற்சித்து 17 பந்துகளில் 18 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த ரிங்குசிங்கும் டக் அவுட்டாக இந்தியாவின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.
போராடி வந்த 100 ரன்கள்:
கேசவ் மகாராஜ் வீசிய 15வது ஓவரில் மட்டும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால், இந்திய அணி 100 ரன்களை கடக்குமா? என்ற கேள்வி எழுந்தது. துபே அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசி 100 ரன்களை கடக்க வைத்தார்.
ஆனாலும் தோல்வி உறுதியான நிலையில் ரன்ரேட்டை கணக்கில் வைத்து விக்கெட்டை கொடுக்காமல் ஆட முயற்சித்தனர். 8 விக்கெட்டுகள் விழுந்துவிட்டதால் துபே ரன்களே எடுக்காமல் கடைசியில் டாட் பந்துகள் ஏராளமாக ஆடினார்.
கடைசியாக ஷிவம் துபே 19வது ஓவரில் அவுட்டானார். அவர் 37 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த பும்ரா முதல் பந்திலே அவுட்டாக இந்திய அணி கடைசியில் 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனா் தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மோசமான தோல்வி:
இந்திய அணி நீண்ட இடைவெளிக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் மிகவும் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் 2வது மோசமான தோல்வி இதுவாகும். இந்திய அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. யான்சென் 4 விக்கெட்டுகளையும், மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், போர்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த தோல்வி இந்திய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




















