Chennai: உங்க வீட்டுல தீய சக்தி இருக்கு.. தோழியை ஏமாற்றி 70 பவுன் நகைகளை பறித்த இளைஞர்!
புஜாங்கரம் என்ற 67 வயது நபர் சில தினங்களுக்கு முன் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன் வீட்டு லாக்கரில் இருந்த 70 பவுன் நகைகள் மாயமானதாக தெரிவித்திருந்தார்.

சென்னையில் வீட்டில் தீய சக்தியை விரட்டுவதாக கூறி 70 பவுன் நகையை திருடிய போலி சாமியாரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் தொழிலதிபரான புஜாங்கரம் என்ற 67 வயது நபர் சில தினங்களுக்கு முன் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன் வீட்டு லாக்கரில் இருந்த 70 பவுன் நகைகள் மாயமானதாகவும், அதனை கண்டுபிடித்து தருமாறும் தெரிவித்திருந்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த வகையில் புஜாங்கரம் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு நுழைந்து திருடர்கள் யாரும் கைவரிசை காட்டியது போன்ற அறிகுறிகள் இல்லாததால் போலீசார் குழப்பமடைந்தனர். அதேசமயம் வீட்டில் யாராவது இந்த நகை காணாமல் போன சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். அதன்படி குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் புஜாங்கரமின் மகளான ஐஸ்வர்யா என்ற 29 வயது பெண் தெரிவித்த தகவல்கள் இவ்வழக்கில் குற்றவாளியை போலீசார் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது. அதாவது ஐஸ்வர்யாவுக்கு ஜெயஸ்ரீ என்ற நெருங்கிய தோழி உள்ளார். அவர் மூலம் ஸ்ரீ தீபதர்ஷன் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். அவரும் ஐஸ்வர்யாவும் நல்ல தொடர்பில் இருந்துள்ளனர்.
அந்த நபர் ஐஸ்வர்யாவிடம், உங்கள் வீட்டில் தீய சக்திகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதனை சில சடங்குகள் செய்வதன் மூலம் விரட்டி விடலாம் எனவும் கூறியுள்ளார். அப்பாவித்தனத்துடன் இதனை நம்பிய ஐஸ்வர்யாவை ஏமாற்ற ஸ்ரீ தீபதர்ஷன் முடிவு செய்தார். அந்த வகையில் சடங்குகளைச் செய்ய தங்க நகைகள் அவசியம் என்று அவளை நம்ப வைத்து கடந்த 3 மாதங்களுக்கு சிறிது சிறிதாக நகைகளை பெற தொடங்கினார்.
இதன்மூலம் வீட்டில் இருந்த 70 பவுன் நகையும் ஸ்ரீ தீபதர்ஷன் வசம் சென்றிருக்கிறது என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கொடுங்கையூர் போலீசார் அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீ தீபதர்ஷனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 63 பவுன் தங்க நகைகளை மீட்கப்பட்டது. இந்த விஷயத்தில் ஸ்ரீ தீபதர்ஷனுக்கு உடந்தையாக இருந்த ஜெயஸ்ரீ தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக மன அழுத்தம், வீட்டில் தொடர் பிரச்னை போன்றவற்றை எதிர்கொள்பவர்களை அணுகி இதுபோன்ற மோசடியில் பலரும் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. ஆன்மிக, ஜோதிட காரணங்களை சொல்வதால் எளிதில் பாதிக்கப்பட்டவர்களும் இதனை நம்பி பணம், அல்லது நகைகளை இழப்பது கவலைக்குரிய விஷயமாக மாறி வருவதாக பலரும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.























