முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் வழங்கப்படும் பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? அதன் சிறப்புகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகவும் முக்கியமான ஒன்று பழனி. பழனிக்கு புராணங்களில் ஏராளமான வரலாறு உள்ளது.
பழனி பஞ்சாமிர்தம்:
அறுபடை வீடுகளில் மிகவும் முக்கியமான பழனியின் முருகப்பெருமானைப் போல, பழனி கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தமும் மிகவும் புகழ்பெற்றது. உலகப்புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சுவையாக இருப்பது ஏன்? அது கெட்டுப்போகாமல் இருப்பதற்கான காரணம் என்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
தயாரிக்கப்படுவது எப்படி?
பழனி பஞ்சாமிர்தத்தில் பயன்படுத்தப்படும் 5 பொருட்கள்:
1. பச்சை மலை வாழைப்பழம்
2. தேன்
3. கற்கண்டு
4. நாட்டுச் சர்க்கரை
5. பேரீச்சம் பழம்
இந்த 5 பொருட்களும் பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கான மிகவும் முக்கியமான பொருள் ஆகும். இதனுடன் பஞ்சாமிர்தத்தின் சுவையை அதிகரிப்பதற்காக ஏலக்காய், நெய் மற்றும் விருப்பாச்சி வாழைப்பழம் ஆகியவை சேர்ப்பார்கள்.
கெட்டுப்போகாதது எப்படி?
இந்த பொருட்கள் எல்லாம் சேர்த்தே பழனி பஞ்சாமிர்தம் செய்கின்றனர். இவை அனைத்தும் இயற்கையான பொருட்கள் ஆகும். எந்தவொரு செயற்கையான பொருளும் இன்றி கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்படுவதால் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சுவை மிகுந்ததாக உள்ளது.
பழனி பஞ்சாமிர்தம் நீண்ட நாட்கள் ஆகியும் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் விருப்பாச்சி வாழைப்பழம் ஆகும். பழனி சுற்றுவட்டாரத்தில் விருப்பாச்சி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பெயரால்தான் இந்த வாழைப்பழம் அழைக்கப்படுகிறது.
இந்த வாழைப்பழத்தில் நீர்ச்சித்து மிகவும் குறைவாக இருக்கும். அதேசமயம், நல்ல அடர்த்தியான தன்மையுடன் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் தன்மை கொண்டது இந்த வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தை பஞ்சாமிர்தத்தில் சேர்ப்பதால்தான் பழனி பஞ்சாமிர்தம் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கிறது. மற்ற செயற்கை ரசாயனங்கள், தண்ணீர் போன்றவை சேர்க்கப்படாத காரணத்தாலும் பழனி பஞ்சாமிர்தம் மிகவும் சுவை மிகுந்ததாக உள்ளது.
ஆரோக்கியம்:
பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டவுடன் அதில் ஒரு பாதியை கோயிலின் மூலவருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அதில் உள்ள பாதியை பழனி பஞ்சாமிர்தத்துடன் கலந்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர். பழனியில் உள்ள மூலவர் சிலை நவபாஷணங்களால் செய்யப்பட்ட சிலை ஆகும். இந்த நவபாஷணத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி பஞ்சாமிர்தமானது பிரசாதமாக மட்டுமின்றி ஆரோக்கியமான பொருளாகவும் உள்ளது. தேன், பேரீச்சம்பழம், வாழைப்பழம், கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை என ஆரோக்கியமான உணவுப்பொருள் அதில் இருப்பதால் இது உடலுக்கு வலிமையை அளிக்கிறது.
பழனி பஞ்சாமிர்தம் சாப்பிடுவதால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான செரோடோனின் சுரப்பது அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. பஞ்சாமிர்தத்தில் உள்ள இயற்கையான ப்ரக்டோஸ் இந்த ஹார்மோனை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.





















