திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா 2026: கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார் சனிபகவான் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசித்த சனிப்பெயர்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருநள்ளாறு: ஆன்மீக உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த சனிப்பெயர்ச்சி விழா, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி, சனிபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.
பஞ்சபூத தத்துவமும் சனிப்பெயர்ச்சி விளக்கமும்
வானவியலின்படி கோள்கள் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வது இயற்கையான நிகழ்வு என்றாலும், ஆன்மீக ரீதியாக குரு, ராகு-கேது மற்றும் சனிப்பெயர்ச்சி ஆகிய மூன்றிற்கும் இந்து மதத்தில் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் சனி பகவான் சூரியனை ஒருமுறை சுற்றி வர 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். மொத்தம் உள்ள 12 ராசிகளிலும் அவர் தலா இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிக்கிறார். இந்த இரண்டரை ஆண்டு கால சுழற்சியையே நாம் 'சனிப்பெயர்ச்சி' என்று அழைக்கிறோம்.
தரிசனத் திருவிழா: கும்பத்திலிருந்து மீனத்திற்கு மாற்றம்
நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கென தனிச் சந்நிதி கொண்டு, பரிகார ஸ்தலங்களில் முதன்மை இடமாகத் திகழும் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், இன்று காலை சரியாக 8:24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசித்தார்.
பெயர்ச்சி நிகழ்ந்த அந்தப் புனிதமான நேரத்தில், சனி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, மலர் அலங்காரங்களுடன் கூடிய மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த புனித நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அலைமோதும் பக்தர்கள்: டிக்கெட் மற்றும் கட்டண விபரங்கள்
புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "சனி ஈஸ்வரா" என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
விஐபி தரிசனம் (VIP) - ரூ 1,000
சிறப்புத் தரிசனம் - ரூ 600
விரைவுத் தரிசனம் - ரூ 300
மேலும், பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காகச் சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500, சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300, மற்றும் திலசூரண நைவேத்திய அர்ச்சனைக்கு ரூ.300 எனத் தனிக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு, சீரான முறையில் பூஜைகள் நடைபெற்றன.
சிறப்புப் பேருந்துகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள்
பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி திருநள்ளாறு வந்து சேர அரசு சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
* கும்பகோணம் கோட்டம் (TNSTC): சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து 200 சிறப்புப் பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
*உள்ளூர் போக்குவரத்து: காரைக்கால் மாவட்ட வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், வேளாண் கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களிலிருந்து 20 பேருந்துகள் தொடர்ச்சியாகச் சேவை வழங்கி வருகின்றன.
*முதியோர் நலன்: முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோயிலை அடைய ஏதுவாக இ-ஆட்டோ (e-Auto) சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
பாதுகாப்புப் பணிகளில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் புனித நீராடும் நளன் குளத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கும் பொருட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் மற்றும் கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் கட்டுப்பட்டு அறையிலிருந்து அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
"பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்வதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) நாள் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும்," என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மகத்தான ஆன்மீக நிகழ்வு, திருநள்ளாறு நகரத்தையே பக்தி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























