பழனியில் நாளை சூரசம்ஹாரம்....தயாராகி வரும் சூரன் உருவபொம்மை
பழனியில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வை முன்னிட்டு சூரன் உருவபொம்மை தயாரிக்கும் பணியில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நாளை மாலை அடிவாரம் கிரிவீதியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகா சூரன், சூரபத்மன் உள்ளிட்ட சூரன்களின் உருவங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, சூரர் பொம்மைகளுக்கான உடல், கை, தலை போன்றவற்றை தயார் செய்யும் பணிகள் ஊர் கோயிலான அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் சூரர்களின் பொம்மைகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். தற்போது தயார் செய்யப்பட்ட சூரர்களின் உருவங்கள் நாளை சூரசம்ஹாரத்தின் போது முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். பின்னர் விஸ்வரூப தரிசனம், 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நெய்வேத்திய நிகழ்ச்சி நடைபெறும். மதியம் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜைகள் நடக்கும். மதியம் 3.15 மணி அளவில் மலைக்கோயிலில் சின்னகுமாரசாமி அசுரர்களை வதம் புரிவதற்காக மலைக்கோயிலில் இருந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
MP Chhattisgarh Election LIVE: மத்திய பிரதேசத்தில் வாக்கு செலுத்த வரும் மக்களுக்கு இலவச உணவு
தொடர்ந்து சன்னதி நடை அடைக்கப்படும்.மாலை 6 மணிக்கு வடக்குகிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபசூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெறும்.
19 ஆம் தேதி காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள் மலைக்கோவிலில் வள்ளி-தெய்வானை சமேதராக சண்முகர் திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரை பெரியநாயகி அம்மன் கோவிலில் ரிஷப லக்கினத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி 18 ஆம் தேதி மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.