Kalaignar 100: கலைஞர் கருணாநிதியை கொண்டாடப்போகும் தமிழ் திரையுலகம்! ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு
அரசியல் தாண்டி தமிழ் சினிமாவிலும் முக்கியப் பங்காற்றி உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை கோலாகமாகக் கொண்டாட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர், திமுக தலைவர் மு. கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் 100ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படும் ஆண்டு என்பதால், இந்த ஆண்டு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திமுகவினர் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் நிலையில் தமிழ் திரையுலகினர் சார்பில் பிரமாண்ட விழா கொண்டாடப்பட உள்ளது. அரசியல் தாண்டி தமிழ் சினிமாவிலும் முக்கியப் பங்காற்றி உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை கோலாகமாகக் கொண்டாட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விழா நடைபெறும் என்றும், உச்ச நட்சத்திரங்கள் தொடங்கி தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை, ஃபெஃப்சி தொழிலாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் என அனைவரும் இந்த விழாவில் பங்கு கொள்வர் என்றும், விழா குறித்த தகவல்களை விரைவில் அறிவிப்பதாகவும் முன்னதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி தெரிவித்திருந்தார்.
சென்னையில் அடுத்த மாதம் இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று அழைத்தனர். இந்த விழாவில் நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.
இதேபோல் நடிகர் கமல்ஹாசனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சென்று நேரில் அழைத்தனர். நடிகர் கமல்ஹாசனும் விழாவில் நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முறையான அனுமதி பெற்ற பின் விழா குறித்த கூடுதல் தகவல்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த விழா வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Kamal Haasan: ப்ரேமம் இயக்குநருக்கு குரலால் தெம்பூட்டிய கமல்ஹாசன்.. அன்புக்கு தூது சென்ற நடிகர் பார்த்திபன்!