"கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பு தரணும்" நிஜ்ஜார் கொலை வழக்கில் அமெரிக்கா பரபர கருத்து!
காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் கனட விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை உலக நாடுகளை பரபரப்பில் ஆழ்த்தியது. கடந்தாண்டு, ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பாக கனட நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைத்த குற்றச்சாட்டு உலக நாடுகளை கதிகலங்க வைத்தது.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்த இந்தியா, அதற்கு கண்டனம் தெரிவித்தது.
நிஜ்ஜார் கொலை வழக்கு:
இந்த விவகாரம் இரு நாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கனட விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அமெரிக்க தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா மீது கனட மீண்டும் பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
இந்த கொலைக்கும் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மாவுக்கும் தொடர் இருப்பதாக கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் அமெரிக்க அரசு பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் இன்று நடைபெற்ற செய்தியாைளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், "கனட விவகாரத்தை பொறுத்தவரையில், அவர்களின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அமெரிக்கா பரபரப்பு கருத்து:
கனட விசாரணைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், வெளிப்படையாக அவர்கள் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. இரு நாடுகளும் பொதுவெளியில் சொன்னதை தவிர்த்து அதை தாண்டி நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை. அவர்கள் ஒத்துழைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்றார்.
இந்திய - அமெரிக்க உறவு குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், "இந்தியா தொடர்ந்து நம்பத்தகுந்த வலுவான கூட்டு நாடாக உள்ளது. சுதந்திரமான, திறந்த, செழிப்பான இந்தோ-பசிபிக் பகுதிக்கான எங்கள் பகிரப்பட்ட பார்வை உட்பட பல விஷயங்களில் நாங்கள் அவர்களுடன் பணியாற்றியுள்ளோம். மேலும் எங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், அந்த கவலைகளை அவர்களிடம் எடுத்து சென்று நேர்மையாக உரையாடுவோம்" என்றார்.