Hamas Chief Ismail Haniyeh : ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் படுகொலை!
Top Hamas Leader Ismail Haniyeh Assassinated In Tehran: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஈரானில் படுகொலை செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் பலமடங்காகியுள்ளது
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காசாவில் பெரும் உயிர்சேதம் நிகழ்ந்துள்ளது. இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் கொல்லப்பட்டார். ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
ஹமாஸ் தலைவர் படுகொலை:
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் வைத்து ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரும், அவரது பாதுகாவலர் ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து தாக்குதல்:
தற்போது கொலை செய்யப்பட்ட ஹனியே கடந்த 2017ம் ஆண்டு ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் இஸ்ரேல் விதித்த பயணக்கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காகவும் துருக்கி மற்றும் கத்தார் தலைநர் தோகாவிற்கு இடையே அடிக்கடி பயணித்து வந்தார்.
மேலும், இஸ்ரேலுக்கு எதிரான போரில் உதவி செய்வதற்காகவும் ஹமாஸ் அமைப்பின் நெருங்கிய நட்பு நாடான ஈரானிடமும் அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.
பெரும் பதற்றம்:
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்களும் கொலை செய்யப்பட்டனர். காசாவின் அல்-ஷாதி முகாமில் காரில் சென்று கொண்டிருந்தபோது இஸ்மாயிலின் மகன்களான ஹசீம், அமீர் மற்றும் முகமது கொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் இஸ்மாயிலின் பேரன் இருவரும் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டிருப்பது ஹமாஸ் அமைப்பினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்னும் தீவிரம் அடையும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். விரைவில் இந்த மோசமான நிலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளனர்.