இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச சகோதரர்களே காரணம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
ராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் பொருளாதாரத்தை தவறாக கையாண்டு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடி கடந்தாண்டு உச்சம் தொட்டது. வரலாறு காணாத விலைவாசி உயர்வு, அதன் பொருளாதாரம் திவாலாகும் நிலைக்கு சென்றது, மருந்து பொருள்களில் பற்றாக்குறை ஏற்பட்டது ஆகிய காரணங்களால் இலங்கை மக்கள் சிக்கி தவித்தனர்.
மக்களை நிலைகுலைய வைத்த பொருளாதார நெருக்கடி:
வரி குறைப்பு, அதிகளவில் பணத்தை அச்சடித்தது, திடீரென இயற்கை விவசாயத்துக்கு மாறியது, கொரோனா பெருந்தொற்று போன்றவை இதற்கு காரணங்களாக சொல்லப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் உச்சமாக வரலாறு காணாத போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். அதன் விளைவாக, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சவும் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவும் ராஜினாமா செய்தனர். புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டார். இப்படிப்பட்ட சூழலில், இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) என்ற அமைப்பு, செயற்பாட்டாளர்கள் சந்திர ஜயரத்ன, ஜெஹான் கனகரெட்னா மற்றும் ஜூலியன் பொலிங் ஆகியோருடன் இணைந்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
"ராஜபக்ச சகோதரர்களே காரணம்"
குடிமக்களின் அடிப்படை உரிமைகளான சமத்துவம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவாதமான தகவல் அறியும் உரிமை ஆகியவற்றை ராஜபக்ச சகோதரர்கள் உள்ளிட்டோர் மீறினர் என வழக்கு தொடரப்பட்டது.
மனுவில் குறிப்பிட்ட நபர்களின் செயலற்ற தன்மையே நாட்டில் உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் எல்பி எரிவாயு பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்த மக்களையும் பாதித்தது என மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர்கள் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டவர்களே பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என இலங்கை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நபர்கள், பொருளாதாரத்தை தவறாக கையாண்டு, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பேராசிரியர் டபிள்யூ.டி.லட்சுமன், முன்னாள் நிதிச் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, முன்னாள் அதிபரின் தனி செயலாளர் பி.பி. ஜயசுந்தர மற்றும் மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினர்களும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.