தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் என்னாச்சு? இப்போ நிலை என்ன? – உதயநிதி பேட்டி
சின்ன ஒரு குளறுபடி. மாணவர்களுக்கு சின்ன அடிதடி. சிறு சிறு காயங்கள்தான். மருத்துவமனைகளுக்கு எல்லாம் கூட்டி செல்லவில்லை.

பஞ்சாப்பில் கபடி வீராங்கனைகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2024 – 2025 ஆம் ஆண்டுக்கான பல்கலைகழக அளவில் பெண்களுக்கான கபடி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. தமிழநாட்டில் இருந்து அன்னை தெராசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை கழகம், அழகப்பா பல்கலைக் கழகம் என 36 வீராங்கனைகள் சென்றுள்ளனர்.
அவர்களுடன் 3 மேலாளர்கள் சென்றுள்ளனர். மேலும் 3 பயிற்றுனர்கள் சென்றுள்ளனர். இன்று அன்னை தெரசா பல்கலைக் கழகத்திற்கும் தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையே கபடி போட்டி நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டு வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்ததாக இன்று காலை புகார் வந்தது. உடனடியாக தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளோம்.
இந்த புகாரின் அடிப்படையில் பயிற்றுநர் பாண்டியராஜனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவல் வந்ததும் அங்குள்ள மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
போட்டி நடக்கும்போது பாய்ண்ட்ஸ் தொடர்பாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஆகியிருக்கிறது. அதனால் பதட்டமான சூழல் உருவாகியிருக்கிறது. அதுதான் சமூக ஊடகங்களிலும் டிவியிலும் வீடியோ வெளியாகியிருக்கு. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இதை உடனடியாக சரி செய்துள்ளோம்.
மேலும் இன்றே வீராங்கனைகளை டெல்லி அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் கைது செய்யப்பட்ட பாண்டியராஜன் அவர்களையும் காவல்துறையினர் விடுவித்துள்ளனர். இன்று நள்ளிரவு அவர்கள் டெல்லி அழைத்துச்செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. வீராங்கனைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். எந்த ஒரு பதற்றமும் இல்லை. யாரும் பயப்பட வேண்டாம். வதந்திகளை பரப்ப வேண்டாம்.
சின்ன ஒரு குளறுபடி. மாணவர்களுக்கு சின்ன அடிதடி. சிறு சிறு காயங்கள்தான். மருத்துவமனைகளுக்கு எல்லாம் கூட்டி செல்லவில்லை. அங்கிருக்கும் முதலுதவி குழுவே சிகிச்சை அளித்தது. அனைத்து மாணவிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
இனி இதுபோன்று நடைபெறாமல் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

