TN 10th 12th Exam 2025: 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு புகார், சந்தேகங்களா?- உதவி எண்கள் அறிவிப்பு
Tamil Nadu 10th 12th Exam 2025: மாணவர்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள், ஐயங்களை தெரிவித்து பயன்பெற அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை - தொடர்பு எண்கள் 9498383075 / 9498383076 தெரிவிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/ ஏப்ரல் - 2025 பொதுத்தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு இன்று தொடங்கியுள்ளன. தேர்வுகள் 25.03.2025 வரையும், மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு 05.03.2025 முதல் 27.03.2025 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 28.03.2025 முதல் 15.04.2025 வரையும் நடைபெறவுள்ளது.
பொதுத்தேர்வுகளை சிறப்பாக நடத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக,
* தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்சாரத் துறைக்கும்
* தேர்வுப் பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல்துறைக்கும்
* தேர்வு மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர
உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு எழுதும் 20,476 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாட்களில் ஒவ்வாரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை - தொடர்பு எண்கள் 9498383075 / 9498383076
ஒழுங்கீனச் செயல்பாடுகள்:-
தேர்வு நேரங்களில் தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு தக்கவாறு தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ / ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்திட பள்ளிக் கல்வி/ தனியார் பள்ளிகள் இயக்குநருக்குப் பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.