Thiruvannamalai Deepam: நாளை திருவண்ணாமலை மகாதீபம்..! தொடங்கியது சிறப்பு பேருந்துகள், ரயில்கள் சேவை..! அலைமோதும் கூட்டம்
விழுப்புரத்தில் இருந்து இன்று முதல் மூன்று நாள்களுக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும் புதுச்சேரியில் இருந்து 180 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா நாளை நடைபெறும் நிலையில், இதற்கான சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை தீபம்:
கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அதனையொட்டி தினமும் காலை, இரவு நேரங்களில் கோயிலின் 5ஆம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை (டிசம்பர்.06) மாலை மகா தீபம் ஏற்றும் முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்) விஷ்ணு தீபம் உள்ளிட்ட ஐந்து தீபங்கள் ஏற்றப்படும். டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக அவை காண்பிக்கப்படும்.
சிறப்பு ரயில்கள்:
அதன்படி சென்னை கடற்கரை முதல் வேலூர் வரை இயக்கப்படும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்குச் சென்றடையும்.
அதேபோல மறுமார்க்கமாக நாளை முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஏற்கெனவே திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 6, 7 தேதிகளில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் காலை 8:40க்கு புறப்படும் சிறப்பு ரயில் பிற்பகல் 12:15க்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
தொடர்ந்து திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 1:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5:30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
சிறப்பு பேருந்துகள்:
அதேபோல் மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக முன்னதாகத் தகவல்கள் வெளியானது. பக்தர்களின் வருகையைப் பொறுத்து பேருந்துகளில் எண்ணிக்கை அதிகரிப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், விழுப்புரத்தில் இருந்து இன்று முதல் மூன்று நாள்களுக்கு 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும் புதுச்சேரியில் இருந்து 180 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
திருக்கோவிலூரில் இருந்து 115 சிறப்பு பேருந்துகள், கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.