ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த ஒப்பந்ததாரர்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த ஒப்பந்ததாரர்களின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கம் சார்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கதிரேசன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் இந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் மணிகண்டன் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கத்தை சார்ந்த ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் வீராசாமி பேசியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைகளுக்கு மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் முறையாக வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் ஆதிதிராவிடர் துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளை மாநில அரசு பொதுப்பணித்துறை நகராட்சி துறை உள்ளாட்சித் துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கம் சார்பாக இருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த அரசு எதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த ஒப்பந்தக்காரர்களை புறக்கணிக்கிறது என்பது தெரியவில்லை. ஆகையால் ஆதிதிராவிட நல சங்கம் ஒப்பந்ததாரர்களுக்காக ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு 18% தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்த இட ஒதுக்கீடை வழங்கி ஒப்பந்ததாரர்கள் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் இருக்கக்கூடிய உதவி செயற் பொறியாளர் பணியிடங்களில் உடனடியாக நிரப்ப வேண்டும். எனவே ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆதி திராவிட நலத்துறை சார்பாக வழங்கப்படும் சிறிய அளவிலான டெண்டர்களை வைத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை செயல்படுத்தி வருகிறார்கள். ஆகையால் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதத்தை காக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய மாநில செயலாளர் கதிரேசன் கூறியது..
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனர் நல துறையை சார்ந்த (SC) ஒப்பந்ததாரர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறது. கடந்த 50 ஆண்டு காலமாக சிறிய அளவிலான டெண்டர்களை எடுத்து தங்களது அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார்கள். தற்போது மாநில அரசு எடுத்துள்ள முடிவுகளால் ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரம் இல்லாமல் ஒப்பந்ததாரர்கள் தவிர்த்து வருகிறார்கள். ஆகையால் உடனடியாக மத்திய அரசு இடமிருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய அனைத்து நிதியும் பெற்று முறையாக இந்த துறைக்கே முழுமையாக நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து எங்களுடைய கோரிக்கையை எடுத்துரைக்க உள்ளோம். அதனைத் தொடர்ந்து எங்கள் கோரிக்கை மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையை சார்ந்த நல சங்கங்களில் இருக்கக்கூடிய ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சென்னையில் இருக்கக்கூடிய தலைமைச் செயலகத்தை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தயங்க மாட்டோம் என்றார்.
மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் கருப்பையா பேசியது..
மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட துறை தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை ஆகும். ஆனால் திமுக ஆட்சியில் இந்த துறையை சார்ந்தவர்கள் முடக்கப்படுகிறார்கள், புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. எங்களைப் போன்ற சிறிய ஒப்பந்ததாரர்கள் திமுக ஆட்சி குறிப்பாக கலைஞர் ஆட்சியை நம்பி தான் இருக்கிறோம். ஆகையால் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து மத்திய அரசிடம் இருந்து எங்கள் துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை முறையாக பெற்று தர வேண்டும் எங்களுடைய வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.