சமயபுரம் கோயிலில் பக்தர்கள் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி.. அதிர்ந்த மக்கள்..
திருச்சி மாவட்டம் சமயபுரம் கோயிலில் பக்தர்கள் வாங்கிய வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி, பக்தர்கள் அதிர்ச்சி..
தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோயிலில்களில் ஒன்று சமயபுரம் மாரியம்மன் கோயிம் ஆகும். இந்த கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். குறிப்பாக திருவிழா நேரங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசனம் செய்து, நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக நேற்று முன்தினம் தஞ்சாவூரை சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் பேரக்குழந்தைகளுடன் சமயபுரம் வந்தனர். அன்றிரவு, சமயபுரத்தில் தங்கிய அவர்கள் நேற்று காலை முடிகாணிக்கை செலுத்திவிட்டு அம்மனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பழனிச்சாமி என்பவரிடம் அவரது பேரக்குழந்தைகள் தாகமாக உள்ளது என்று கூறியதால், அப்பகுதியில் ஒருவர் விற்றுக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலை பழனிச்சாமி வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து பாட்டிலின் மூடியை திறந்தபோது, பாட்டிலுக்குள் ஒரு பல்லி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் இதுகுறித்து தண்ணீர் பாட்டில் விற்ற நபரிடம் கேட்டபோது அதற்கு அவர் மழுப்பலாக பதில் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பழனிச்சாமி சமயபுரம் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையினர் அவரை நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.
சமயபுரம் கோயிலில் வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி, பக்தர்கள் அதிர்ச்சி.. #samayapuramtemple #waterbottle #Lizarddeath #Trichy pic.twitter.com/ZlWaFfB0Pw
— Dheepan MR (@mrdheepan) May 23, 2022
மேலும் பல்லி இறந்து கிடந்தது தெரியாமல் தண்ணீரை பருகி இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்று அச்சத்துடன் அவர் தெரிவித்தார். இதுபோன்று தரமில்லாத, பல்லி உள்ளிட்ட பூச்சிகள் இருப்பது தெரியாமல் தண்ணீர் பாட்டில் விற்கும் நிறுவனத்தின் மீது பாரபட்சமின்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்லும் இடம் சமயபுரம் மாரியம்மன் கோயில், இங்கு விற்கபடும் வாட்டர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லியால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆகையால் உடனடியாக மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்