கரிகால் சோழனின் கல்லணை கால்வாயை நவீனப்படுத்தும் பணி 25 சதவீதம் நிறைவு
இந்த திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகத்தையே வியக்கவைத்த அணை கரிகால சோழனால் கட்டபட்ட கல்லணை ஆகும். தமிழரின் சிறப்பினை உலகத்திற்கு எடுத்துகாட்டிய கல்லணையை நவீனபடுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி கல்லணை கால்வாய் நவீனப்படுத்தும் பணி 25 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் குறுவை சாகுபடி முடிந்தவுடன் பணிகள் தீவிரமாக நடைபெறும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள்னார்.
கல்லணை மற்றும் அதன் கால்வாய் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 1928ஆம் ஆண்டு வெட்டபட்ட கல்லணை கால்வாயில் 148 கி.மீ தொலைவுக்கு முதன்மை வழித்தடம் உள்ளது. இதில் 636 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிளை வாய்கால்களும், 694 நீர் பிடிப்பு பகுதிகளும் வெட்டப்பட்டுள்ளது. இதன்படி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக கடைமடை வரை சென்று சேரும். இதற்கிடையில் கால்வாய் கட்டி நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால் கரைகளில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து கல்லனை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கல்லணை கால்வாய் விரிவாக்குதல் மற்றும் புனரமைக்கும் திட்டமானது 6.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தயார் செய்யப்பட்டது. இதன்படி ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதி உதவியுடன் ரூபாய் 2963 கோடி செலவில் கல்லணை கால்வாய் சீரமைக்கும் பணி முதல் கட்டமாக தொடங்கப்பட்டது. திருச்சி மண்டல நீர் வளத்துறையின் தலைமை பொறியாளர் கண்காணிப்பில் இந்த பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தில் 1232 கி.மீ நீளமுள்ள கல்லணை கால்வாய் வாயக்கால்களை அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ற வகையில் சீரமைப்பது, புதிதாக 1,714 மதகுகளை திரும்ப கட்டுவது, 29 மதகுகள் சீரமைப்பது, 26 கால்வாய் பாலங்கள் திரும்ப கட்டுவது, 16 கால்வாய் பாலங்களை சீரமைப்பது, 24 நீரொழுங்கிகளை திரும்பக் கட்டும் பணி, ஒரு நீரொழுங்கி புதிதாக அமைக்கும் பணி, 20 பாலங்கள் திரும்ப கட்டும் பணி, 10 பாலங்களை சீரமைக்கும் பணி, 403 ஏரிகளை புனரமைக்கும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 5 தொகுதிப்புகளாக இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக தற்போது திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பூதலூர், திருவெரும்பூர் வட்டங்களில் கல்லணை பிரதான வாய்க்காலில் 12.624 கி.மீ மற்றும் கிளை வாய்க்கால் ஆகிவற்றில் மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் கான்கீரிட் தளம் அமைத்தல், அட்டப்பன் பள்ளம் வடி குழாய் சீரமைத்தல், மணல் பொறி அமைத்தல் உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது வரை 25 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.