தென்காசி அருகே நடுநிசியில் நடந்த மயான பூஜை ! குழப்பத்தில் கிராம மக்கள்..!
இரவு அனைவரும் உறங்கிய பின்னர் நடுநிசியில் மயானத்தில் புகுந்த மர்ம நபர்கள் 3 மண் கலயங்கள் மீது தேங்காய் வைத்து செந்நிற ஆடைகளை சுற்றி மாலை அணிவித்து உள்ளனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ளது பூபாலசமுத்திரம் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கெனெ தனி பொது மயானம் ஒன்று ஊருக்கு தென்புறத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று காலையில் மயானம் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் மயானத்தில் கிடந்த காட்சிகளை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக மயானத்தில் மிகப்பெரிய படையல் போட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று இருந்துள்ளது. குறிப்பாக இரவு அனைவரும் உறங்கிய பின்னர் நடுநிசியில் மயானத்தில் புகுந்த மர்ம நபர்கள் 3 மண் கலயங்கள் மீது தேங்காய் வைத்து செந்நிற ஆடைகளை சுற்றி மாலை அணிவித்து உள்ளனர். பின்னர் அதற்கு கீழே படையலாக வாழை இலைகளை விரித்து தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு என பல்வேறு பழங்களை வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் தனியாக தயார் செய்யப்பட்ட படையல் சாப்பாடுகளை அதில் படைத்து உள்ளனர்.
அதன்பின் தடியங்காய்களை இரண்டாக வெட்டி அதன் மீது குங்குமத்தை தடவி மூன்று சேவல் கோழிகளின் தலைகளை வெட்டியும் பலி கொடுத்து மிகப்பெரிய மயான பூஜைகளை நடத்தியுள்ளனர். பலியிடப்பட்ட கோழிகளின் உடல்களை நாய்கள் தூக்கிச் சென்றன. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடுஇரவில் மயானத்தில் கோழிகளின் தலைகளை வெட்டி மயான பூஜைகளில் ஈடுபட்ட நபர்கள் யார்? எதன் அடிப்படையில் எதற்காக இந்த பூஜையை நடத்தினர்? சிறப்பு சக்தியினை பெறுவதற்கு இந்த பூஜை நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர், ஆட்கள் இல்லாத நேரமாக பார்த்து நடுநிசியில் நடத்தப்பட்ட இந்த பூஜையால் பூபாலசமுத்திரம் பகுதி மக்கள் மிகப்பெரிய குழப்பத்தையும் அதிர்ச்சையும் அடைந்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.