சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் ராமச்சந்திரன்
வெளிநாடுகள் மற்றும் கோவளம் போன்ற கடற்கரையைப்போல் தூத்துக்குடியில் முள்ளக்காடு கடற்கரையிலும் சுற்றுலா மேம்படுத்தப்படும்.
தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரைப்பகுதியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் தொடங்கப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கடற்கரைப்பகுதியில் கடல்நீர் சாகச விளையாட்டுகள் தொடங்குவது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அமைப்பது தொடர்பாக சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், ”தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புதலுடன், தூத்துக்குடி முள்ளக்காடு கடற்கரைப்பகுதியை கடல்நீர் சாகச விளையாட்டுகள் அடங்கிய சுற்றுலா தலமாக ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு ரூ.1.70 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து நிபுணர்களை வைத்து எந்தெந்த சாகச விளையாட்டுகள் இங்கு கொண்டு வரலாம் என்று திட்டமிட்டு அதன் அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தாமதமாவதற்கு காரணம் கிட்டத்தட்ட 23 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதுதான். தற்போது நிலம் வாங்குவதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். விரைவில் நிலம் வாங்கப்பட்டு வருவாய்த்துறையில் இருந்து சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்திற்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நிர்வாகத்திடம் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.45.46 இலட்சம் முதற்கட்டமாக பெறப்பட்டு சாகச விளையாட்டுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த வாரம் துவங்கப்படும்.
மேலும், சுற்றுலாத்துறை மூலமும் தேவையான நிதி ஒதுக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை தருவதற்கு தயாராக இருக்கிறார்கள். வெளிநாடுகள் மற்றும் கோவளம் போன்ற கடற்கரையைப்போல் தூத்துக்குடியில் முள்ளக்காடு கடற்கரையிலும் சுற்றுலா மேம்படுத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து துறைகளையும் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டினை 2 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு உயர்த்தியுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுளார்கள். சுற்றுலாவை மேம்படுத்தினால் உள்@ர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கிடைப்பதுடன் அரசுக்கும் வரி வருவாய் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.
ஆய்வின்போது சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், மண்டல மேலாளர் (சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மதுரை) டேவிட் பிரபாகரன், சுற்றுலா அலுவலர் திருவாசன், தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரன், முள்ளக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கோபி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.