சிலிண்டருக்கு அலைக்கழித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் - அபராதம் விதித்து அதிரடி காட்டிய நீதிமன்றம்
கந்தசாமி தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு ஏஜென்சி மாற்றம் செய்யப்படும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
சிலிண்டர் கொடுக்காமல் அலைக்கழித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மூவாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி முதல்வரான கந்தசாமி என்பவர் மன்னார்குடி ருக்மணி கேஸ் ஏஜென்சியில் இன்டேன் கேஸ் இணைப்பு வாடிக்கையாளராக இருந்து வருகிறார்.கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிலிண்டர் பதிவு செய்வதற்காக ருக்மணி கேஸ் ஏஜென்சி அலுவலகத்திற்கு அவர் சென்றுள்ளார். அப்போது உங்களது கேஸ் இணைப்பை மன்னார்குடி மங்கை கேஸ் ஏஜென்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கந்தசாமி மங்கை கேஸ் ஏஜென்சிக்கு சென்று கேட்டதற்கு எங்கள் ஏஜென்சிக்கு மாற்றியதற்கான உத்தரவு எதுவும் வரவில்லை எனவே ருக்மணி கேஸ் ஏஜென்சிபிடமே கேட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இவ்வாறு மாற்றி மாற்றி இரண்டு கேஸ் ஏஜென்சிகளும் அவரை அலைக்கழித்து உள்ளனர்.
கந்தசாமி கல்லூரி முதல்வராக இருப்பதால் தனது அலுவல்களுக்கு இடையிலும் தொடர்ந்து ஏழு மாத காலமாக இரண்டு கேஸ் ஏஜென்சிகளுக்கும் அலைந்தும் அவருக்கு சிலிண்டர் வழங்கப்படவில்லை. இதற்கிடையே ஏழு மாதம் ஆகிவிட்டதால் உங்களது இணைப்பை புதுப்பிப்பதற்கு திருச்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கந்தசாமி தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு ஏஜென்சி மாற்றம் செய்யப்படும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் எக்காரணம் கொண்டும் ஏஜென்சி இணைப்பை மாற்றக்கூடாது என்று பதில் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கந்தசாமி திருவாரூர் நுகர்வோர் குறைதீர் அணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் சேவை குறைபாடு,மன உளைச்சல்,பொருள் நஷ்டம்,மனக்கிலேசம் ஆகியவற்றிற்காக 2 லட்சம் ரூபாயும், உரிய நேரத்தில் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யாமல் கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை கஷ்டப்படுத்தியதற்காக தண்டனைக்குரிய சேதங்கள் என எடுத்துக்கொண்டு அதற்கு இழப்பீடாக ஒரு லட்ச ரூபாயும், மேலும் வழக்கு செலவிற்காக பத்தாயிரம் ரூபாய் என மொத்தம் மூன்று லட்சத்து 10 ஆயிரம் ரூபாயினை இரண்டு கேஸ் ஏஜென்சிகளும், இந்தியன் ஆயில் கார்பரேஷன் திருச்சிராப்பள்ளி சீனியர் ஏரியா மேனேஜர் ராஜேஸ், சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மேலாளர் ஆகியோர் நான்கு வார காலத்திற்குள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் எனவும் மேலும் இரண்டு கேஸ் ஏஜென்சிகளில் ஒருவர் தங்கு தடையின்றி வாடிக்கையாளருக்கு மீண்டும் சிலிண்டர் வழங்க வேண்டும் எனவும் நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். இந்த தொகையினை 6 வார காலத்திற்குள் வாடிக்கையாளர்க்கு வழங்க தவறும் பட்சத்தில் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.