மயிலாடுதுறை: மூன்றடியில் காய்த்து குலுங்கும் தென்னை மரம்! ஆச்சரியத்தில் கிராம மக்கள்..!
மயிலாடுதுறை அருகே மூன்று அடி உயரத்தில் தென்னை மரம் காய்த்து குலுங்கி வருகிறது.
நம் வாழ்வில் பிரிக்கமுடியாத வகையில் பிணைந்துவிட்ட மரம், தென்னை. தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மிக பழங்காலத்தில் இருந்தே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். மலேசிய பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும், மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்கு தீவுக்கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகளில் தென்னை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 லட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டுக்கு 14 ஆயிரம் கோடி தேங்காய்கள் விளைகின்றன.
நெட்டை தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு 7-வது ஆண்டில் இருந்து 10-வது ஆண்டுக்குள் காய்க்க தொடங்கும். குட்டை வகைகள், நட்டு 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் காய்க்க தொடங்கும். இவற்றின் ஆயுள் 30 முதல் 35 ஆண்டுகள். தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்கு பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணெய் கொடுக்கிறது. தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக, குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக, மனிதனுக்கு இயற்கையின் வரம் தென்னை. இத்தகைய சிறப்பு மிக்க தென்னை மயிலாடுதுறை அருகே மூன்று அடி உயரத்தில் காய்த்து குலுங்குகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சிவக்குமார். இவர் தனது வீட்டின் வாசலில் 12 வருடங்களுக்கு முன்பு வைத்த தென்னைமரம் 22 அடி உயரம் வளர்ந்து 5 வருடங்களாக நன்றாக காய்த்து குலுங்கியது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இந்த மரத்தில் காய்த்த தேங்காயை எடுத்து வீட்டின் கொல்லையில் பதியம் செய்து உள்ளார். வாசலில் இருந்த தாய் மரம் நன்றாக காய்த்து வந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பெய்த கனமழையின் போது இடி தாக்கியதில் கருகி மரம் பட்டுப்போய்விட்டது. இதனால் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் தான் பதியம் போட்டு வைத்த மரம் 2 அடி உயரத்தில் வளர்ந்த நிலையில் தேங்காய் காய்க்க தொடங்கியது கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிறிய மரத்தில் தேங்காய் காய்க்கும் செய்தியறிந்து கிராமமக்கள் ஆச்சரியத்துடனும், வியப்புடனும் அந்த மரத்தை சென்று பார்த்து வருகின்றனர். தற்பொது 3 அடி உயரமுள்ள இந்த தென்னை மரத்தில் குலைகுலையாய் தேங்காய் காய்த்து தொங்குகிறது. இந்த மரத்தில் உள்ள தேங்காய், இளநீரை பறித்து கோயில் அபிஷேகத்திற்கு கொடுப்பதாகவும் இதுவரை 100-க்கும் மேற்பட்ட தேங்காய் பறித்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறும் சிவக்குமார் குலைகுலையாய் காய்க்கும் தென்னை மரத்தை பார்க்க வரும் கிராமமக்களிடம் டேப்பை வைத்து அளந்து காண்பித்து வருகிறார். சிறிய மரத்தில் காய்க்கும் தேங்காய் பெரிய மரத்தில் காய்க்கும் தேங்காய் போன்று உள்ளதால் இளநீர் தண்ணி அதிகமாக உள்ளதால் உற்சாகத்துடன் மரத்தை பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்.