கிறிஸ்தவரான செல்வப்பெருந்தகை தனி தொகுதியில் போட்டியிடுவதா.. உடனே பதவி விலகனும்- சீறும் பாஜக
செல்வப்பெருந்தகை தான் சார்ந்த சமுதாயத்தை மறைத்து உண்மையை மறைத்து மோசடி செய்து தேர்தலில் போட்டியிட்டிருப்பதாக தெரிவித்துள்ள பாஜகவின் நாராயணன் திருப்பதி, உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

செல்வப்பெருந்தகை மகளுக்கு நிச்சயதார்த்தம்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார். இந்த நிலையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த செல்வப்பெருந்தகை தனி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பாஜக தலைமை செய்தி தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பதிவில், திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழானது காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ். இந்த அழைப்பிதழின் வாசகங்கள் செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதை உறுதிபட தெரிவிக்கின்றது.
கிறிஸ்தவ முறைப்படி நிச்சயதார்த்தம்
செல்வப்பெருந்தகை அவர்கள் கிருஸ்துவராகவோ, இஸ்லாமியராகவோ, ஹிந்துவாகவோ இருப்பதில் நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை, ஆட்சேபனையும் இல்லை. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியானது, பட்டியிலன சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி (Reserved Constituency) என்பதும், அந்த தொகுதியில் பட்டியலினத்தை சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்ட/வெற்றிபெற்ற ஆனால், தாங்கள் கிருஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றவர்கள் என்பதை மறைத்து பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்று ஏமாற்றி மோசடி செய்தவர்களை தகுதியிழக்க செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இணைக்கப்பட்டுள்ள திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழானது காங்கிரஸ் கட்சி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை @SPK_TNCC அவர்களின் மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழ்.
— Narayanan Thirupathy (@narayanantbjp) February 21, 2026
மணம் முடிக்க காத்திருக்கும் மணமக்களுக்கு நம் வாழ்த்துகளும், ஆசிகளும்.
இந்த… pic.twitter.com/Gp3tAQEWbC
உண்மையை மறைத்து தேர்தலில் போட்டி.?
அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதால், செல்வப்பெருந்தகை அவர்கள், தான் சார்ந்த சமுதாயத்தை மறைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி, உண்மையை மறைத்து மோசடி செய்து தேர்தலில் போட்டியிட்டிருப்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடான செயல் என்பதோடு பட்டியிலன மக்களுக்கு காங்கிரஸ் கட்சி செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.
செல்வப்பெருந்தகை பதவி விலகனும்
தெரிந்தே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள செல்வப்பெருந்தகை அவர்கள் பதவி விலக வேண்டும், காங்கிரஸ் கட்சி பட்டியிலின மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, செல்வப்பெருந்தகையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்வப்பெருந்தகை அவர்களின் வெற்றி செல்லாது என்பதை சட்ட ரீதியாக உறுதி செய்வதோடு, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக செல்வப்பெருந்தகையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக நாராயாணன் திருப்பதி அந்த பதிவில் வலியுறுத்தியுள்ளார்.























