குடிபோதையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு... தஞ்சாவூரில் 5 பேர் கைது
நவீன் தன்னை தாக்குவதற்கு சுரேஷ் தான் காரணம் என்று பிரசாத் நினைத்துள்ளார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் கூறி சுரேசை தாக்க திட்டம் தீட்டியுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் குடிபோதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் கீழவாசல் குறிச்சி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சுரேஷ் (21) இவர் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது உறவினர் நவீன். இந்நிலையில் நவீனுக்கும் பிரசாத் என்பவருக்கும் இடையே கடந்த மாதம் வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நவீன், பிரசாத்தை தாக்கியுள்ளார்.
இதையடுத்து நவீன் தன்னை தாக்குவதற்கு சுரேஷ் தான் காரணம் என்று பிரசாத் நினைத்துள்ளார். இதுகுறித்து தனது நண்பர்களிடம் கூறி சுரேசை தாக்க திட்டம் தீட்டியுள்ளார். கடந்த 18-ந்தேதி மாலை கீழவாசல் வெள்ளை பிள்ளையார்கோவில் அருகே தனது பைக்கில் வந்த சுரேசை பிரசாத்தின் தூண்டுதலின் பேரில் சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் சுரேசை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் முதுகில் அரிவாள் காயம் பட்ட சுரேஷ் அலறியுள்ளார். உடன் அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
அரிவாள் வெட்டுப்பட்ட சுரேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் ஆறுமுகம் (35), அம்மன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்த லாசர் மகன் அபினேஷ் (20), அதே பகுதியை சேர்ந்த அமலதாஸ் மகன் சிவசக்தி(25), குருநாதர் மகன் மணிசங்கர்(25) மற்றும் 16 சிறுவன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கிழக்கு போலீசார் ஆறுமுகம் உட்பட 4 பேரையும் கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். 16 சிறுவனை சிறுவர் சீர்திருந்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள அம்மன்பேட்டையை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் தளபதி, பிரசாத் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதில் ஆறுமுகம் மற்றும் தளபதி இருவரும் போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், இருவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே 14 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை செய்த 17வயது சிறுவர்கள் 2 பேர் உட்பட 4 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் செங்கிப்பட்டி அருகே உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி மாலை அந்த 14 வயது சிறுமி பள்ளி முடிந்து வெளியில் வந்துள்ளார். அப்போது செங்கிப்பட்டி உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் நண்பர்களான க,ராஜேஷ் என்கிற பிரகதீஸ்ராஜ் (31), பி.மதன் (20) மற்றும் ஒரு 17 வயது சிறுவனுடன் காரில் வந்துள்ளார்.
தொடர்ந்து பள்ளி முடித்து வீட்டுக்கு செல்ல பேருந்து நிறுத்தத்திற்கு வந்த அந்த 14 வயது சிறுமியை வழிமறித்து நீ என்னைதான் காதலிக்க வேண்டும். வேறு யாரையும் காதலித்தால் தொலைத்துவிடுவேன் என்று கூறி மிரட்டி கையை பிடித்து இழுத்து துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேலும் காரில் ஏற்றவும் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்குள் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தால் சிறுமியை விட்டு விட்டு அந்த 17 வயது சிறுவன் உட்பட 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகதீஸ்ராஜ், மதன் இருவரையும் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவர்கள் இருவரையும் தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் செங்கிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.























