Sivakarthikeyan: “எதிர்ப்பவர்கள் இருந்தாலும், ஏற்றி விட ரசிகர்கள் இருக்கிறார்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!
அமரன் படம் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. இன்னும் கொடுக்கும் என கூறினேன். அதை கொடுத்துக்கொண்டே இருக்கிறது என நடிகர் சிவகார்த்திகேயன் பிலிம்ஃபேர் விருதுகள் விழாவில் பேஎசியுள்ளார்.

எவ்வளவு பேர் என்னை எதிர்த்தாலும், பேசினாலும் என்னை மேடையேற்றி விட ரசிகர்கள் இருக்கிறார்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் 2024ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் “அமரன்”. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்த இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. அமரன் படம் சிவகார்த்திகேயன் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பிரிவில் சிவகார்த்திகேயனுக்கு பிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நடிகை சிம்ரன் வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், “இது எனக்கு முதல் பிலிம்ஃபேர் விருது. என் நன்றியை நடுவர்களுக்கும், இதற்கு காரணமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். 13 ஆண்டுகளுக்கு முன்னால் நான் தனுஷூடன் இந்த விருது நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன். அப்போது எனக்கு 2ம் வரிசையில் தான் இடம் கிடைத்திருந்தது. ஜாலியா வா போய்ட்டு வரலாம் என அவர் கூப்பிட்டார். ஆனால் முதல் வரிசைக்கு வருவதற்கு எனக்கு 13 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
நான் கோவா திரைப்பட விழாவுக்கு செல்லும்போது விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், அமரன் படம் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. இன்னும் கொடுக்கும் என கூறினேன். அதை கொடுத்துக்கொண்டே இருக்கும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும், என் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் அமரன் படத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்திட போகும்போது அவர் அலுவலகத்தில் நிறைய பிலிம்ஃபேர் விருதுகள் இருப்பதைக் கண்டேன். கண்டிப்பாக அமரன் படமும் அதற்கான விருதைப் பெறும் என நினைத்தேன். அது நடந்து விட்டது. இந்த விருதை எனக்கு பிடித்த சிம்ரன் கொடுத்தது மிகவும் சிறப்பானது. அது இன்னும் ஸ்பெஷல்.
நான் ரொம்ப ஜாலியான ஒரு ஆள். நீ ஏன்பா இப்படி ஒரு சீரியஸான கேரக்டரில் நடிக்கிறாய் என கேட்காமல் ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக என்னுடைய ரசிகர்களை குறிப்பிட விரும்புகிறேன். எவ்வளவு பேர் என்னை எதிர்த்தாலும், பேசினாலும், என்னை எப்படி போட்டு அடிச்சாலும், துவைச்சாலும், தூக்கி தூக்கி என்னை மேடை மேல் ஏற்றி நிற்க வைத்துள்ளீர்கள். நீங்கள் கைதட்டி இன்னும் பெரிய மேடைக்கு கொண்டு செல்வீர்கள். நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது என்பதை மட்டும் இந்த தருணத்தில் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.























