இடர்பாடுகளை தாண்டி மும்முரம் அடைந்துள்ள சம்பா, தாளடி அறுவடை... ஆலக்குடி பகுதியில் விறுவிறுப்பு
இயற்கை வாழ வைத்தாலும், வாட்டினாலும் விவசாயத்தை கைவிடாதவர்கள்தான் விவசாயிகள்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி பகுதியில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர் அறுவடை பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது. இதில் பல வயல்கள் ஈரப்பதமாக உள்ளதால் சிறிய அளவிலான செயின் பொருத்தப்பட்ட அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன,
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம்தான் பிரதான தொழில். இயற்கை வாழ வைத்தாலும், வாட்டினாலும் விவசாயத்தை கைவிடாதவர்கள்தான் விவசாயிகள். விவசாயி அளந்து பார்த்தால் ஒன்றும் மிஞ்சாது என்பார்கள். அதிலும் தொடர் மழையோ, தண்ணீர் வரத்து இல்லாமலோ இருந்தால் விவசாயிகள் சாகுபடிக்கு செலவு செய்யும் பணம் கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
காவிரி டெல்டா மாவட்டத்தில் முக்கியமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி நடந்து வருகிறது. சில பகுதிகளில் கோடை சாகுபடியாகவும் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகள் ஒருபோக சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்டனர். தற்போது அறுவடை பணிகள் நடந்து வருவதால் மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சாவூர் அருகே ஆலங்குடி பகுதியில் தானடி அறுவடை பணிகள் வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பகுதிகளில் பல வயல்கள் ஈரப்பதமாக உள்ளதால் நெல் அறுவடை செய்யும் பெரிய அளவிலான இயந்திரங்கள் கொண்டு அறுவடை பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் செயின் பொருத்தப்பட்ட சிறிய அளவிலான இயந்திரங்கள் மூலம் விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறிய அளவிலான நெல் அறுவடை இயந்திரங்கள் அதிக அளவில் இல்லாததால் பல விவசாயிகள் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை தூறி வருகிறது. ஏற்கனவே வயல் ஈரப்பதமாக உள்ளதால் நெல்மணிகள் நன்கு முற்றி உதிரும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் லேசான சாரல் மழை பெய்வதால் அறுவடை பணிகள் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
அறுவடை பணிகளை மேற்கொண்டாலும் இரவு மற்றும் காலைப் பொழுதில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் நெல்மணிகள் ஈரப்பதம் அதிக அளவில் உள்ளது. எனவே விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லில் அதிகபட்ச ஈரப்பதம் உள்ளது என காரணம் காட்டி கொள்முதல் செய்வதை தவிர்க்கக்கூடாது, தாமதம் செய்யக்கூடாது என கோரிக்கையும் எழுந்துள்ளது.























