திருவாரூரில் ஆபத்தான நிலையில் இருக்கும் மடப்புரம் பாலம் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் புதிய பேருந்து நிலையம் விரைவாக செல்வதற்கு பழுதடைந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
திருவாரூரில் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள ஆபத்தான மடப்புரம் பாலத்தை சீரமைத்து விரிவுப்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் நகருக்குள் வருவதற்கு மடப்புரம் என்கிற இடத்தில் ஒடம்போக்கியாற்றின் குறுக்கே ஒற்றை வழி சிறிய பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தினை மோட்டார் சைக்கிள், சைக்கிள், நடந்து செல்பவர்கள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் மட்டுமே பயன்படுத்தும் அளவிற்கு குறுகிய பாலமாக அந்த பாலம் உள்ளது. இந்த பழமையான குறுகிய பாலத்தின் கைப்பிடிகள் இடிந்தும் பாலத்தின் தூண்கள் செல்லரித்தும் காணப்படுகிறது. மிகவும் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த பாலத்தின் இரு புறத்தின் தடுப்புகள் கட்டைகள் இடிந்து விழுந்து வருவதால் சாலைகளில் போக்குவரத்தினை சீரமைப்பதற்கு வைக்கப்படும் இரும்பு தடுப்புகளை கொண்டு அடைத்துள்ளனர்.
அவ்வப்போது தற்காலிக சீரமைப்பு பணிகளை செய்தாலும் பாலம் தொடர்ந்து வலுவிழந்து பலவீனப்பட்டு வருகிறது. இதனால் பாலத்தை மக்கள் அச்சத்துடன் கடந்து செல்லக் கூடிய சூழல் நிலவுகிறது. நாகை-தஞ்சை சாலையில் திருவாரூர் விளமல் கல்பாலம் அருகில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இதனால் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குறிப்பாக மடப்புரம் சித்தி விநாயகர் கோவில் தெரு காட்டுகாரத்தெரு பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய பேருந்து நிலையம் விரைவாக செல்வதற்கு பழுதடைந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற மடப்புரம் தெட்சிணாமூர்த்தி மடத்திற்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களும் குறுகிய பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மடப்புரம் அருகில் தான் தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்களும் எளிதாக வருவதற்கு பழுதடைந்த மடப்புரம் பாலத்தை கடந்து வருவது வழக்கம். இந்த பாலத்தில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருவது வழக்கம். இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பாலத்தை கடந்து செல்லும் போது எதிரில் சைக்கிளில் கூட வர முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த பழுதடைந்த பாலம் இடிந்ததால் மடப்புரம் பகுதிக்கு வருபவர்கள் இங்கிருந்து வெளியில் செல்பவர்களும் வெகுதூரம் சுற்றி செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த பாலத்தை புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள ஆபத்தான பாலத்தை இடித்து அனைத்து வாகனங்களும் செல்லும் வகையில் புதிதாக அகலமான பாலத்தை கட்டிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்