மயங்கி விழுந்த மாவட்ட ஆட்சியர்....அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு...நடந்தது என்ன..?
மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருவாரூர் அடுத்த புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அரசின் ஆட்சியர் பங்கு பெறும் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இந்த நேர்காணல் முகாமில் புலிவலம் மற்றும் வேலங்குடி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பயனாளிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சார்பில் 60 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா, 98 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 30 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களும், வேளாண்மை துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் உயிர் உரம், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பாரத பிரதமரின் ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை 14 பயனாளிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரமும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரமும் வருவாய் துறையின் சார்பில் 10 நபர்களுக்கு பட்டா மாற்றம் ஆணைகள் என மொத்தம் 236 பயனாளிகளுக்கு 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கும்போதே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். அருகாமையில் இருந்தவர்கள் அவரை பத்திரமாக மீட்டு நாற்காலியில் அமர வைத்தனர்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நிகழ்ச்சியின் பாதியிலேயே தனது முகாம் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஒரே இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இதன் காரணமாக அந்த இடத்தில் இறுக்கமான சூழல் நிலவி வந்தது இந்த நிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வழங்கி வந்த பொழுது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றது. அரசு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மயங்கி விழுந்தது திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா தனித் துணை ஆட்சியர் கண்மணி திருவாரூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் புலிவலம் தேவா புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி வெங்கடேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்