பல மொழிகளை கற்பதில் தவறில்லை, எந்த மொழியையும் திணிக்க கூடாது - பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன்
உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் எந்த பல்கலைக்கழகத்திலும் இல்லாத வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் மொழிக்காக தன்னுயிர் நீத்த மாணவனுக்கு சிலை அமைத்து பெருமைப்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்: உலகில் எந்த மொழியும் குறைவானது அல்ல. பல மொழிகளை கற்பதில் தவறில்லை. எந்த மொழியையும் திணிக்க கூடாது என மேனாள் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் பேசினார்.
தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் 169 ஆண்டுகள் பழமையான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் (தன்னாட்சி) 2வது ஆண்டாக உலக தாய்மொழி நாள் விழா கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறை தலைவரும், இணைப்பேராசிரியருமான முனைவர் காளிமுத்து அனைவரையும் வரவேற்றார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முதுமுனைவர் அரங்க.பாரி கலந்து கொண்டு தாய் மொழி நாள் வாழ்த்துரையாற்றினார்.
முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் சபாபதி மோகன் பேசியதாவது:
உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் எந்த பல்கலைக்கழகத்திலும் இல்லாத வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் மொழிக்காக தன்னுயிர் நீத்த மாணவனுக்கு சிலை அமைத்து பெருமைப்படுத்தியுள்ளது. நான் சார்ந்த துறை வேதியியல் என்ற போதும், என்னை யாரும் வேதியியல் சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு அழைப்பதில்லை.
மாறாக தமிழ்த்துறை அதிகம் என்னை நேசித்து அழைப்பதால் அதில் அதிகம் பங்கேற்கிறேன். அறிஞர் அண்ணா, அம்பேத்கர் போன்றோரின் சமூக நீதியும் சமத்துவ சிந்தனைகளும் தான் மனிதனை மனிதனாக வாழ வழி காட்டுவன. அவர்களின் சிந்தனை மரபில் மாணவர்கள் எதிர்காலத்தில் பயணிக்க வேண்டும்.
தியாகி நடராஜன் உயிர் மாய்த்துக்கொண்ட நாளைத்தான் தாய்மொழி நாளாக கொண்டாட அறிவித்திருக்க வேண்டும். உலக தாய்மொழி நாளின் முக்கிய நோக்கமே எந்த மொழி மீதும் வெறுப்பு கூடாது. விரும்பிய மொழிகள் அனைத்தையும் அனைவரும் கற்கலாம். ஆனால் விரும்பி கற்பது என்பது வேறு, மொழியை திணிப்பது என்பது வேறு. 1938-39களில் எந்த ராஜாஜி இந்தியை திணிக்க முயன்றாரோ அவரே பின்னர் 50களில் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு இந்தி நம் நாட்டில் அலுவல் மொழியாக இருக்கலாம் ஆனால் தேசிய மொழியாக அனுமதிக்க முடியாது என்று பேசினார்.
குறிப்பாக ஒரே நாடு ஒரே மொழி, ஒரே தேர்தல் எல்லாவற்றிலும் பன்முக தன்மை வேண்டும். எந்த மொழியும் குறைந்தது அல்ல. ஒவ்வொரு மொழிக்கும் என தனித்தனி பண்பாடும், நாகரீகமும், கலாச்சாரமும் இருக்கும். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை இன்று நம் தாய்மொழி தமிழிலேயே கற்றும் வசதி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தான் பேசும் போது இடையே சட்ட மேதை அம்பேத்கர் எந்த நாட்டில், எந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் என மாணவ, மாணவிகள் மத்தியில் கேள்வி எழுப்பிய போது, 3ம் ஆண்டு கணிதத்துறை மாணவர் துணிவோடு எழுந்து வந்து மேடையில் பதில் அளித்தார். அவருக்கு சபாபதி மோகன், ரூபாய் 500 ரொக்கம் வழங்கி பாராட்டி மகிழ்ந்தார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.