கும்பகோணத்தில் காட்சி பொருளாக இருந்து வரும் போலீஸ் நிழற்குடை: சமூக ஆர்வலர்கள் வேதனை
கும்பகோணம் மேம்பாலம் பகுதியில் காட்சி பொருளாக வெகு காலமாக இருந்து வரும் போலீஸ் நிழற்குடை.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேம்பாலம் பகுதியில் காட்சி பொருளாக வெகு காலமாக இருந்து வரும் போலீஸ் நிழற்குடை பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதை உடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
கோவில்களால் நிரம்பி வழியும் நகரம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழங்காலத்திலிருந்த பல கோவில்களால் நிரம்பி வழிகிறது. இது கட்டிடக்கலை, கலை மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தின் அடிப்படையில் மிக ஆரம்ப கட்டத்தில் வளர்ச்சி கண்ட ஒரு நகரம். சங்க காலத்தில் கும்பகோணம் சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் என பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வம்சங்களின் ஆட்சியின் கீழ் இருந்தது.
புனித நகரமான கும்பகோணத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலான அபிமுகேஸ்வரர் கோவில், பழைய தென்னிந்திய கட்டமைப்பு வடிவமைப்பின் தெளிவான தன்மையை வெளிப்படுத்துகிறது. இத்தகைய சிறப்பு நிறைந்த கும்பகோணத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாகனப் போக்குவரத்து மிகுந்த பகுதி
இப்படிப்பட்ட கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ள மேம்பாலம் பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த பகுதியின் வழியாக ஏராளமான பஸ்கள், லாரிகள், குறிப்பாக பள்ளி கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அதனை சரி செய்யும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் பகுதியில் சாலையில் ஓரத்தில் கண்ணாடி கூண்டுடன் கூடிய போலீசார் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையில் இருந்து எப்போது ஒரு போக்குவரத்து போலீசார் பணியில் இருந்து போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியல் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுவது இல்லை. இதனால் போக்குவரத்து நிறைந்த இந்த பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஆம்புலன்ஸ் போன்றவை விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
காட்சிப் பொருளாக உள்ளது
இதனால் அந்த நிழற்குடை உரிய பராமரிப்பின்றி காட்சி பொருளாக உள்ளது. மேலும் உரிய பராமரிப்பு செய்யப்படாததால் தூசிகள் படிந்து காணப்படுகிறது. இந்த நிழற்குடையை சிலர் தங்களது பொருட்களை வைக்கும் இடமாக பயன்படுத்தி வருகிறன்றனர். சிலர் பழைய காகித பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலின் போது போலீசார் வந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
பயன்படுத்த முடியாத நிலை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வெயில் மற்றும் மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசலின் போது போலீசார் சாலையில் நின்று போக்குவரத்து ஒழுங்குப்படுத்த முடியாது இதனால் போலீஸ் நிழற்குடை அமைக்கப்பட்டது.
தற்போது அந்த நிழற்குடை போலீசார் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. காகித மற்றும் பிளாஸ்டிக் பெட்டிகளை வைத்துள்ளனர். இதனால் அவை பழைய பொருட்களை வைக்கும் இடம் போல் காட்சி அளிக்கிறது என்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற்குடையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு மீண்டும் போலீசார் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.