தஞ்சையில் கிருஷ்ண ஜெயந்தி விழா; உற்சாகமாக நடந்த உறியடி உற்சவம்..!
வழுக்கு மரம் ஏறி பலரும் சறுக்கி கொண்டே வந்தனர். இவர்கள் மீது நாலாபுறமும் இருந்து தண்ணீர் வாரி இறைக்கப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி தஞ்சை மேலவீதி யாதவ கண்ணன் கோயிலில் காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடந்து. பின்னர் இரவு உறியடி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இளைஞர்கள் வழுக்கு மரம் ஏறி உறியடித்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி தஞ்சை மேலவீதி நவநீத கிருஷ்ணன் கோயிலில் ஆண்டுதோறும் உறியடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 22-வது ஆண்டாக உறியடி திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், இசை நிகழ்ச்சிகள், பூச்சொரிதல், கோபூஜை ஆகியவையும் நடைபெற்றது. குழந்தைகள் கிருஷ்ணன் வேடத்தில் வந்து பங்கு பெற்றனர்.
முக்கிய நிகழ்ச்சியான உறியடி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது. எண்ணெய் தடவப்பட்ட 40 அடி உயர வழுக்கு மரத்தில் இளைஞர்கள் மனித கோபுரம் அமைத்து ஏறினார்கள். இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். இதில் ரமேஷ் என்பவர் வழுக்கு மரம் உச்சிவரை சென்று அங்கு தொங்கவிடப்பட்டு இருந்த பொருட்களை எடுத்து அசத்தினர். கூடி இருந்த மக்கள் கைதட்டி உற்சாகம் அடைந்தனர். முன்னதாக கிருஷ்ணன் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏற்பாடுகளை உறியடி குழு தலைவர் கோபால், செயலாளர் சரத்யாதவ் மற்றும் யாதவ கண்ணன் பக்த கோடிகள் மற்றும் தஞ்சை ராஜாக்கோட்டை யாதவர்கள் செய்திருந்தனர்.
இதேபோல் மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த வரகூர் கோயிலிலும் உறியடி திருவிழா கோலாகலமாக நடந்தது. திருவையாறுக்கு அருகில் கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் திருப்பூந்துருத்தி எனும் திருத்தலம் உள்ளது. இங்கிருந்து 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வரகூர் எனும் கிராமத்தையும் வெங்கடேசப் பெருமாள் கோயிலையும் அடையலாம்.
ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. அதாவது நாராயண தீர்த்தர் எனும் அடியவர், பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார். அப்போது இந்த ஊருக்கு வரும் போது அவருக்கு வழி தெரியவில்லை. அந்த சமயத்தில், பெருமாள், வெண்பன் றியாக வந்து வழிகாட்டியதுடன் தன்னுடைய திருக்கோலத்தையும் காட்டியருளினார். வராகம் என்றால் பன்றி.
இதையடுத்து இந்த ஊர், வராகூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் வரகூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். சிலிர்த்துப் போன நாராயண தீர்த்தர், அங்கேயே, அந்தத் தலத்திலேயே தங்கினார். கிருஷ்ண பகவானின் லீலைகளை விவரிக்கும் வகையிலான ‘ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி’ எனும் இசையும் நாட்டியமும் கலந்த நாடகத்தை அரங்கேற்றினார்.
அதுமட்டுமா? இந்தத் தலத்தில் உறியடி உத்ஸவம் நடைபெறச் செய்தார். வரகூர் எனும் அற்புதமான திருத்தலத்தில், கிருஷ்ண ஜெயந்தியின் போது ஆண்டுதோறும் உறியடி உத்ஸவம் நடக்கிறது.
அதேபோல் இந்தாண்டும் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி வரகூர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், இரவு உறியடி உற்சவம் ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு நடந்த உறியடியில் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு உறியடிக்க முயற்சித்தனர். வழுக்கு மரம் ஏறி பலரும் சறுக்கி கொண்டே வந்தனர். இவர்கள் மீது நாலாபுறமும் இருந்து தண்ணீர் வாரி இறைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.