வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை... விண்ணப்பிக்க தஞ்சை கலெக்டர் அறிவுறுத்தல்!
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
![வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை... விண்ணப்பிக்க தஞ்சை கலெக்டர் அறிவுறுத்தல்! Thanjavur district collector gives scholarships to Jobless youths in the district TNN வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை... விண்ணப்பிக்க தஞ்சை கலெக்டர் அறிவுறுத்தல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/07/3689d0e06f352aa6638964ff4f4044361667802888724501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.2022 அன்றைய தேதியில ஐந்து வருடம் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற, மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவர் ஆவர்.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை, எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து 30.09.2022 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர் ஆவர். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயிலுபவராக இருக்கக்கூடாது. இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு, தமிழக அரசால் கீழ்க்கண்டவாறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொதுப்பிரிவினருக்கு உதவித்தொகையாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம் வழங்கப்படும்.
இதே போல் அனைத்து வகை மாற்று திறனாளிகளில் எழுதப் படிக்கத் தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1000-ம் வழங்கப்படும். ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு , மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் பட்ட படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது.
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ் மற்றும் அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து விண்ணப்பப் படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் வாயிலாக தஞ்சை மாவட்டத்தில் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பயன் பெற்றுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)