”கிரக, வாஸ்து தோஷங்கள் அனைத்தும் விலக ஒரே இடம்” தஞ்சை மூலை அனுமார் கோயிலுக்கு போங்க..! சிறப்புகள் இதுதான்!!
சனி தோஷம், நவக்கிரகங்கள் தோஷங்களை நீக்கி பக்தர்களின் வேண்டுதலை அப்படியே நிறைவேற்றும் தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுங்களா?
தஞ்சாவூர்: சனி தோஷம், நவக்கிரகங்கள் தோஷங்களை நீக்கி பக்தர்களின் வேண்டுதலை அப்படியே நிறைவேற்றும் தஞ்சாவூர் மூலை அனுமார் கோயிலின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுங்களா? 18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து மூலவருக்கு 18(அ)56(அ)108 எலுமிச்சை பழங்களான மாலையை சாற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் வாஸ்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
கிரக தோஷம் விலகும் ; நன்மை பிறக்கும்
தஞ்சை என்றாலே கோயில்கள் நிறைந்த ஊர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இங்குள்ள கோயில்கள் ஒவ்வொன்றும் பக்தர்களின் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றும் ஸ்தலங்களாக உள்ளன. இதனால்தான் தஞ்சைக்கு பிற மாவட்டம் மற்றும் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அந்த வகையில் தஞ்சையின் பெருமையை மேலும் உயர்த்தும் கோயிலாக மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது என்றால் மிகையில்லை. இதை மூலை அனுமார் கோயில் என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.
இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாகும் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது. இக்கோவிலை தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மன் கட்டினார். இதில் முக்கிய விசேஷம் என்னவென்றால் கொடிமரத்துடன் கூடிய அனுமனுக்கான தனி பெரும் கோவிலாக இது உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம். இக்கோயிலில் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சனி தோஷம் உட்பட நவக்கிரகங்கள் தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் போக்கும் ஸ்தலம். சத்குரு தியாகராஜ சுவாமிகள் வழிபட்ட ஸ்தலம் ஆகும். இக்கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
இந்த தடைகள் இருந்தாலும் விலகும்
படிப்பில் தடை, திருமணத்தடை, வியாதிகள், தொடர்ந்து துன்பங்கள் நேர்ந்தால் மூலை அனுமாரை மூல நட்சத்திர நாட்களில் வழிபடுவது சிறப்பு. அன்று 18 அகல் விளக்குகள் ஏற்றி 18 முறை மவுனமாக கோயிலை வலம் வரவேண்டும். இதனால் குறைகள் விலகி நலம் பயக்கும்.
இக்கோயிலில் சீதையுடன் பட்டாபிஷேக ராமர், ருக்மணி, பாமா சமேதராக கிருஷ்ண பகவான், இலட்சுமி நரசிம்மர், சங்கரநாராயணர், ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் தியானம் செய்யும் கற்சிற்பம் ஆகியவை உள்ளன. பத்து தலை ராவணன் சிலையும், வாலை சுருட்டி ஆஞ்சநேயர் அமர்ந்துள்ள சிற்பமும் இங்குள்ளன. இது தவிர, 12 ராசிகள் அடங்கிய ராசி மண்டல சிற்பமும் இருக்கிறது. அவரவர் ராசி முன்பு நின்று மூலை அனுமாரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மிக சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி நாள் சிறப்புடன் நடக்கிறது. கூட்டு வழிபாடு செய்தால் கோடி பலன் தரும் ஸ்தலம் என்பதால் அனுமன் ஜெயந்தி அன்று 18 அபிஷேகப் பொருட்களை பக்தர்கள் கொண்டு வந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் அவரவர் இல்லத்தில் பிரார்த்தனை செய்து எடுத்து வந்த மஞ்சள் பூசிய தேங்காயை கோவில் உட்பிரகாரத்தில் தீபமேற்றி வழிபடும் இடத்தில் உள்ள அனுகிரகம் ஆஞ்சநேயர் முன் வேண்டி சிதறு தேங்காய் எறிந்து பிரார்த்தனை காணிக்கையாக ரூ.18 உண்டியலில் செலுத்தி வழிபாடு செய்தால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பது ஐதீகம்.
18 அமாவாசைகள் 18 முறை வலம் வந்து மூலவருக்கு 18(அ)56(அ)108 எலுமிச்சை பழங்களான மாலையை சாற்றி வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் வாஸ்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மார்கழி மாதம் 108 முறை வலம் வந்து மூலை அனுமாரை வழிப்பட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும்.