வேலியே பயிரை மேய்ந்த கதை... பாடம் கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியருக்கு பாடம் கற்றுக்கொடுத்த போலீஸ்
போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ரமேஷை நேற்று கைது செய்தனர். பாடம் கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியருக்கு இப்போது போலீசார் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்: வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியரே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை தஞ்சை மாவட்டத்தில் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்,56,. இவர் திருவாரூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், தனது வீட்டில் டியூசன் வகுப்பு எடுத்து வருகிறார். தனது டியூசனில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்தினர் சிலருக்கு ஆசிரியர் ரமேஷ் வட்டிக்கு பணமும் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர், டியூசனில் 11ம் வகுப்பு படிக்கும், 16 வயது பள்ளி சிறுமியின் பெற்றோரும் கடனாக பணம் பெற்றுள்ளனர். இதனால், கடன் தொகையை கேட்பதுபோல் மாணவியிடம் டியூசனில் பலமுறை ஆசிரியர் ரமேஷ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், நேற்றுமுன்தினம் பணம் கேட்க சென்ற போது வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியை ஆசிரியர் ரமேஷ் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இது தொடர்பாக மாணவியின் தாய், ஆடுதுறை அனைத்து மகளிர் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். புகாரின் பேரில், ரமேஷிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ரமேஷை நேற்று கைது செய்தனர். பாடம் கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியருக்கு இப்போது போலீசார் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர். தங்களிடம் பாடம் கற்க வரும் மாணவியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் வேலியாக இருக்க வேண்டிய ஆசிரியர் இப்படி கள்ள ஆடாக மாறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், இப்படி போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வீடுகளில் குழந்தைகள் இருக்கும் நேரத்தை விட ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். தங்களை நம்பி வரும் குழந்தைகளை தங்களின் குழந்தைகளாக நினைக்காமல் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, கருப்பு ஆடாக ஆசிரியர்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தஞ்சாவூர் அருகே 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை
புதுக்கோட்டை மாவட்டம் அரியாணிப்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் விக்னேஷ் (19). ஜேசிபி ஆபரேட்டர். இவர் பணி காரணமாக தஞ்சாவூர் அருகே ஒரு கிராமப்பகுதிக்கு வந்த போது அந்த பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி காதலிப்பதாக விக்னேஷ் தெரிவித்து நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி செவ்வாய்கிழமை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான அந்த சிறுமி தனக்கு நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அந்த சிறுமியின் பெற்றோர் தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் விக்னேசை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் விக்னேஷ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





















