மயிலாடுதுறை: பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்!
நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் ஊகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்ட நிலையில் முழு பொது முடக்கம் நாடு முழுவதும் அமலானது. இதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி உள்ளிட்ட எல்லா கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்னர் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்த போது பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் பள்ளிக்கல்வித்துறை கருத்துகளை கேட்டிருந்தது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்து தெரிவித்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிபோனது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் காரணமாக மீண்டும் தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு முடக்கம் அமலானதால் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் தொற்றின் எண்ணிக்கை குறைந்த நிலையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக பள்ளிகளின் இன்று முதல் தொடங்கி உள்ளன.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கனிசமான மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு படையெடுத்தனர். வீட்டிலேயே இருந்து பாடம் படித்து நண்பர்களுடன் சேர்ந்து படிக்க முடியாத நிலை மாறப்போவதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
முககவசம் அணிவது கட்டாயம் மாணவர்கள் முக கவசம் அணியாவிட்டால் பள்ளிகளிலேயே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுமதிக்கப்படுவதில்லை. நுழைவாயிலில் சானிடைசர்கள் கைகளில் தெளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் பள்ளிகள் திறப்புக்கு முன்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்புக்கான, வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, 9 முதல் 12ம் வகுப்பு வரை 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும், பள்ளிக்கூடங்கள் ஷிப்டு முறையில் செயல்பட வேண்டும், வகுப்பறையில் பாதி அளவு மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் நடைமுறை படுத்த பட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இந்நிலையில் மயிலாடுதுறை அருகே நீண்ட இடைவேளைக்குப் பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் மாணவ மாணவிகள் இன்று பள்ளி திறத்தை முன்னிட்டு ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்.
கொரோனா பொது முடக்கத்தில் காரணமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று பள்ளி திறக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை அப்பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து பூ, பழம் வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து ஆசிரியர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்க மாணவர்களும் அதனை பின்பற்றி உறுதிமொழி ஏற்றனர். பின்னர் மாணவர்கள் முகக் கவசம் அணிந்தபடி அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனர்.